

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிர்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்து வென்றது.
இதன் மூலம் இப்போட்டியில் தனது கடைசி ஆட்டத்தில் மட்டும் வென்று ஆறுதல் அடைந்துள்ளது ஆஸ்திரேலியா. கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்பட்டது. எனினும் பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்து, அடுத்து சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான ஒரு வெற்றியுடன் நாடு திரும்புகிறது.
அதே நேரத்தில் போட்டியை நடத்தும் நாடான வங்கதேசத்தின் நிலைமை மேலும் மோசமாக அமைந்துவிட்டது. சொந்த மண்ணில் பங்கேற்ற 4 போட்டிகளில் ஒன்றில் கூட வங்கதேச அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதையடுத்து தமீஸ் இக்பால், அனாமுல் ஹக் ஆகியோர் பேட்டிங்கை தொடங்கினர். 2-வது ஓவரிலேயே ஹக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினார். மறுமுனையில் தமீம் இக்பால் 5 ரன்களில் வெளியேறினார்.
இதனால் 2 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் என்ற நிலையை எட்டியது. ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன், கேப்டன் ரஹீம் ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடியது. இதனால் வங்கதேச அணியின் ஸ்கோர் சீராக உயரத் தொடங்கியது.
17-வது ஓவரில் வங்கதேசம் 124 ரன்கள் எடுத்திருந்தபோது 3-வது விக்கெட்டை இழந்தது. ரஹீம் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே அல் ஹசன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 52 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. அடுத்து 154 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கடந்த 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடாத ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் இப்போட்டியில் அதிரடியாக விளையாடினர்.
ஆரோன் பிஞ்ச், வார்னர் ஆகியோர் வங்கதேச பந்து வீச்சை சிதறியடித்தனர். இதனால் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்தது. 12-வது ஓவரில் வார்னர் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த பிஞ்ச் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 15.1 ஓவரில் 135 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
17.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் ஜார்ஜ் பெய்லி சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார். ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பிஞ்ச் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டதால் இப்போட்டி முடிவு எவ்வித பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை இப்போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்திருந்தால், குருப் 2-ல் கடைசி இடத்துக்குச் சென்றிருக்கும்.