

த்ரோ செய்வதாக தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் தனது பந்துவீச்சை சரி செய்துகொண்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீச ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
அதே போல் வங்கதேச ஸ்பின்னர் சொஹாக் காஜி என்பவருக்கும் தடை நீங்கியது.
சயீத் அஜ்மல் மற்றும் சோஹாக் காஜி பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களது முழங்கை மடங்குவது ஐசிசி கட்டுப்பாடான 15 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரது மீதான தடை நீக்கப்பட்டது.
ஆனாலும், மீண்டும் அவர்கள் போட்டிகளில் பந்துவீசும் போது 15 டிகிரிக்கு மேல் முழங்கை மடங்குவதாக நடுவர்கள் உணர்ந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
சயீத் அஜ்மல் மற்றும் சோஹாக் காஜி ஆகியோர் மீது நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனைகள் அடங்கிய படங்கள், வீடியோக்கள் நடுவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அவரது மாறிய பந்துவீச்சு ஆக்சன் இடம்பெற்றுள்ளது.
இருவரது பந்துவீச்சும் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் இறுதி சோதனைக்குட்படுத்தப்பட்டது.
முன்னதாக சயீத் அஜ்மல் வீசிய அனைத்துப் பந்துகளும் வேறுபாடின்றி த்ரோ என்று ஐசிசி சோதனைகளில் தெரியவந்தது. 42 டிகிரி முழங்கையை மடக்கி அவர் அனைத்து பந்துகளையும் வீசினார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சயீத் அஜ்மல் உலகக்கோப்பை அணியின் தேர்வுகளிலிருந்து விலக்கப்பட்டார். காரணம் பாகிஸ்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மீது ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அஜ்மலின் பந்துவீச்சை சரி செய்ததில் முன்னாள் பாக். ஸ்பின் மேதை சக்லைன் முஷ்டாக்கின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.