Published : 19 Apr 2014 11:00 AM
Last Updated : 19 Apr 2014 11:00 AM

யுவராஜ் சிங் மீதான விமர்சனம் நியாயமற்றது: விராட் கோலி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு யுவராஜ் சிங் மீது தொடுக்கப்பட்ட விமர்சனம் நியாயமற்றது என பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

சார்ஜாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸைத் தோற்கடித்தது. அதில் யுவராஜ் சிங் 29 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் குவித்தார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு விராட் கோலி கூறியதாவது: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு யுவராஜ் சிங் மீது தொடுக்கப்பட்ட விமர்சனம் நியாயமற்றது. 2007-ல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்று தந்தவர் யுவராஜ் சிங். தான் ஒரு மேட்ச் வின்னர் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியவர். அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது மிக முக்கியமானது என்றார்.

வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி கண்டது. அதில் யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் தோல்விக்கு அவர்தான் காரணம் என்று கூறி கடும் விமர்சனம் எழுந்தது மட்டுமின்றி, அவர் வீட்டின் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதை குறிப்பிட்டே கோலி மேற்கண்டவாறு கூறினார்.

டெல்லி அணியைக் கட்டுப்படுத்திய தனது அணி பௌலர்களை வெகுவாகப் புகழ்ந்த கோலி, “இந்த மைதானத்தில் 170 ரன்களுக்கு மேல் குவிக்கலாம். ஆனால் டெல்லி அணியை எங்கள் பெளலர்கள் 145 ரன்களுக்குள் சுருட்டியது மிகப்பெரிய விஷயம். குறிப்பாக சாஹல் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இதேபோல் வருண் ஆரோன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் நன்றாக பந்துவீசினர்” என்றார்.

தோல்வி குறித்து டெல்லி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “அனைத்துத் துறைகளிலும் எங்களை பெங்களூர் அணி வீழ்த்திவிட்டது. டுமினி, டெய்லர் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் மற்றவர்கள் போதுமான அளவுக்கு சரியாக பேட் செய்யவில்லை. இதேபோல் எங்களின் பீல்டிங்கும் மோசமாக அமைந்துவிட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x