Published : 26 Apr 2014 09:08 AM
Last Updated : 26 Apr 2014 09:08 AM

நாட்டில் மூன்றில் ஒரு பகுதியில் நக்சல்கள் பிரச்சினை உள்ளது: தென்பிராந்திய ராணுவ தளபதி தகவல்

நாட்டில் மூன்றில் ஒரு பகுதியில் நக்சல்கள் பிரச்சினை உள்ளது. இந்த பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தென்பிராந்திய ராணுவ தளபதி ஜக்பர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் ‘பாதுகாப்பு அமைப்புகளில் தொழில்நுட்ப முன்னேற்றம்’ தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிஐஐயின் தமிழக பிரிவு முன்னாள் தலைவர் என்.கே.ரங்கநாத் வரவேற்றார். கிழக்கு கடலோர காவல்படை கமாண்டர் என்.பி.சர்மா, கூடுதல் டிஜிபி டாக்டர் பிரதீப் பிலிப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்பிராந்திய ராணுவ தளபதி ஜக்பர் சிங் பேசியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு முறையில் அதிநவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. உள்நாட்டு பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. மேலும், தனியார் துறையுடனும் இணைந்து செயல்படுகின்றன. பாதுகாப்பு துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் தேவை அதிகமாகவே உள்ளது.

2013-14-ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.65,340 கோடி (10.8 பில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2017-18 ஆண்டுகளில் ரூ.1,13,740 கோடியாக (18.8 பில்லியன் டாலர்) உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி பாதுகாப்பு விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துவதற்கு உதவும். பாதுகாப்புத் துறைக்கு சிறப்பான கட்டுமானங்கள், தீவிரவாதத்துக்கு எதிரான பயிற்சி மையங்கள் அதிகரிக்கப்படும்.

எல்லை பாதுகாப்பிற்கு மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் சராசரியாக ரூ.1,512 கோடி முதல் ரூ.3,025 கோடி வரை செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், சாலைகளை மேம்படுத்துதல், பாதுகாப்பான மின்விளக்குகள், சோதனைச் சாவடிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரிவுபடுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x