பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்துவோம்: ஆப்கான் கேப்டன் நம்பிக்கை

பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்துவோம்: ஆப்கான் கேப்டன் நம்பிக்கை
Updated on
1 min read

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள இந்திய அணி அடுத்த பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை நாளை (பிப்.10) எதிர்கொள்கிறது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியப் பந்து வீச்சை 371 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியா பிறகு பந்துவீச்சிலும் துல்லியம் காட்டி இந்தியாவை 265 ரன்களுக்கு சுருட்டியது.

இந்நிலையில் அடிலெய்டில் நடைபெறும் ஆப்கான் அணிக்கு எதிரான நாளைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்துவோம் என்று அந்த அணியின் கேப்டன் மொகமட் நபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆப்கான் கேப்டன் மொகமட் நபி கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராக எங்களது அனைத்து திறமைகளையும் ஒன்று திரட்டி விளையாடவிருக்கிறோம். வங்கதேசத்துக்கு எதிரான எங்களது முதல் உலகக்கோப்பை ஆட்டத்திற்கு சிறந்த தயாரிப்பை நாளைய போட்டி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம், இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏனெனில், நாங்கள் கடந்த சில மாதங்களாக நல்ல தயாரிப்புடன் இருந்து வருகிறோம். மேற்கு ஆஸ்திரேலியா கிளப் அணிகளுடன் விளையாடி 2 போட்டிகளில் அவர்களை வீழ்த்தியும் இருக்கிறோம். எனவே நல்ல தயாரிப்பில் இருக்கிறோம்.

ஆசியாவிலிருந்து மிகவும் மாறுபட்ட களங்கள் இவை. நாங்கள் ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்தில் நீண்ட நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நன்றாக விளையாடுவோம் என்று நினைக்கிறோம் எங்களிடம் ஷபூர், ஹமீத் மற்றும் தவ்லத் சத்ரான் என்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக நல்ல தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். எனவே வங்கதேசத்தை முதல் போட்டியில் வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள். இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி 2-வது சுற்றுக்கு முன்னேறும் எண்ணத்துடன் வந்திருக்கிறோம்.” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஆப்கான் கேப்டன் மொகமட் நபி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in