

மெல்போர்னில் நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் இன்று வங்கதேச அணியை இலங்கை 92 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 332 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 47 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லசித் மலிங்கா 9 ஓவர்களில் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற லக்மல், தில்ஷன் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், பெரேரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
332 ரன்களை முதலில் சொதப்பலான பீல்டிங், மற்றும் பவுலிங்கில் விட்டுக் கொடுத்த வங்கதேச அணிக்கு இலக்கைத் துரத்தும் போது முதல் மலிங்கா ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது.
2 ஸ்லிப்புடன் தமிம் இக்பாலுக்கு ஓவரைத் தொடக்கிய மலிங்கா முதல் பந்தை தள்ளி வீச ஆடாமல் விட்டார் தமிம். அடுத்த பந்து மலிங்காவின் வழக்கமான, அவரது ஆக்சனுக்கு இயல்பாக விழும் பந்து. அதாவது இடது கை வீரருக்கான இன்ஸ்விங்கர். அதனை காலை நகர்த்தி ஆட முயன்றார் தமிம் ஆனால் காலுக்கும் மட்டைக்கும் இடையில் புகுந்து பந்து ஸ்டம்பைத் தாக்கியது. பெரிய விக்கெட்டை இழந்தது வங்கதேசம். அதே ஓவரில் சவுமியா சர்க்கார் புல்டாஸை பவுண்டரி அடிக்க அடுத்த பந்து யார்க்கரில் ஒரு பலமான எல்.பி.முறையீடு எழுந்தது. தப்பித்தார் சர்க்கார்.
அடுத்த ஓவரில் அனாமுல் ஹக், சுரங்க லக்மல் பந்தை மேலேறி வந்து ஒரு ஷாட்டை ஆட முயல பந்து மிட் ஆப், கவருக்கு இடையே காற்றில் எழும்பியது சுலபமான கேட்ச் ஆனால் ஒருவரும் வரவில்லை, கடைசியாக தில்ஷன் வந்தார்... விட்டார் கேட்சை. அனாமுல் ஹக் மிகப்பெரிய ஹூக் ஷாட் வீரர். அடுத்ததாக மலிங்காவின் பவுன்சரை அவர் அற்புதமாக ஹூக் செய்து பவுண்டரி விளாசினார். சவுமியா சர்க்கார், லக்மல் ஓவரில் 2 அபார பவுண்டரிகளை அடித்தார்.
ஆட்டத்தின் 6-வது ஓவரை வீச கேப்டன் மேத்யூஸ் வந்தார். 2-வது பந்து மீண்டும் ஒரு ஷாட் பிட்ச், மீண்டும் அனாமுல் புல் ஆட ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ். அடுத்து சிங்கிள் எடுத்து சர்க்காரிடம் ஸ்ட்ரைக் கொடுக்க அவரோ, மேத்யூஸ் பந்தில் அதே ஓவரில் வெளியே சென்ற பந்தை எட்ஜ் செய்து சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேசம் 6 ஓவர்கள் முடிவில் 41/2. சர்க்கார் 15 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து காலியானார்.
அடுத்த லக்மல் ஓவரில் மொமினுல் ஹக் 1 ரன்னில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மஹ்முதுல்லா, அனாமுல் ஹக்குடன் இணைந்தார். 44/3 இலிருந்து ஸ்கோர் 84 ரன்களுக்குச் சென்றது அப்போது 29 ரன்கள் எடுத்த அனாமுல் ரன் அவுட் ஆனார். மஹ்முதுல்லா பந்தை மிட்விக்கெட்டில் தட்டி விட அனாமுல் பாதி தூரம் சிங்கிளுக்கு ஓடி வந்தார். மஹ்முதுல்லா நகரவேயில்லை. த்ரோ நேராக ஸ்டம்பில் பட்டதாக ரிபிளே காண்பிக்க நன்றாக ஆடிவந்த அனாமுல் அவுட் ஆனார்.
16-வது ஓவரில் 84/4 என்று ஆன வங்கதேசம், 21-வது ஓவரில் மஹ்முதுல்லா (28) விக்கெட்டை பெரேராவிடம் இழந்தது. அதன் பிறகு ஷகிப் உல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் சேர்ந்து 100/5-லிருந்து 32-வது ஓவரில் 164 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது ஷகிப் உல் ஹசன் 59 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 46 ரன்களில் தில்ஷன் பந்தை மேலேறி வந்து ஆடி லாங் ஆனில் மலிங்காவிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாக அவர் 29-வது ஓவரை வீசிய ரங்கன்னா ஹெராத்தை நன்றாகக் கவனித்தார். நேராக ஒரு சிக்ஸ், பிறகு அதே திசையில் தரையோடு ஒரு பவுண்டரி, பிறகு கட் ஷாட்டில் ஒரு பவுண்டரி என்று அந்த ஓவரில் விளாசினார். அதன் பிறகும் மேத்யூஸை 2 பவுண்டரிகள் விளாசினார். 31-வது ஓவரில் 156/5 என்று இருந்தது. இன்னும் 19 ஓவர்களில் மேலும் 176 ரன்களை அடிக்க வேண்டும். ஷாகிப் தன்னால் முடிந்ததைச் செய்தார் அவ்வளவே.
முஷ்பிகுர், சபீர் ரஹ்மான் இணைந்து 44 ரன்களை சுமார் 9 ஓவர்களில் சேர்த்தனர். 39 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 36 ரன்கள் சேர்த்த முஷ்பிகுர், லக்மல் பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். அது ஸ்லோ பால் அதனை ஒதுங்கிக் கொண்டு ஆட முயன்று பவுல்டு ஆனார்.
41-வது ஓவரில் வங்கதேசம் 208/7 என்று ஆனது. சபீர் ரஹ்மான் 53 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை எட்டினார். அவர் மலிங்கவிடம் விழ, மஷ்ரபே மோர்டசா, தில்ஷன் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். கடைசி விக்கெட்டாக தக்சின் அகமட், மலிங்காவிடம் எல்.பி. ஆகி வெளியேற ஆட்டம் முடிந்தது. வங்கதேசம் தோல்வி.
ஆட்டநாயகனாக 161 நாட் அவுட் மற்றும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய திலகரத்ன தில்ஷன் தேர்வு செய்யப்பட்டார். பிரிவு ஏ-யில் இலங்கை 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று நிகர ரன் விகிதம் +0.047 என்று 2ஆம் இடத்தில் உள்ளது. 3-வது இடம் ஆஸ்திரேலியா, 4-வது இடம் வங்கதேசம். 5-வது இடம் ஆப்கன்.
வங்கதேச பந்துவீச்சை பிய்த்து உதறிய தில்ஷன், சங்கக்காரா
முன்னதாக முதலில் பேட் செய்த இலங்கை வங்கதேசப் பந்துவீச்சை சிதறடித்தது. தில்ஷன், சங்கக்காரா ஆகியோர் பிய்த்து உதறினர்.
டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. திரிமானி, தில்ஷன் களமிறங்கினர். மோர்டசா வீசிய முதல் ஓவரிலேயே திரிமானிக்கு ஸ்லிப்பில் வங்கதேசம் கேட்ச் விட்டது. அதன் பிறகு திரிமானி 52 ரன்கள் எடுத்து ஸ்கோர் 122 ரன்களாக இருந்த போது, 25-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு விக்கெட் விழவில்லை. சங்கக்காரா தனது அதிவேக ஒருநாள் சதத்தை எடுத்தார். அவரது 400-வது ஒருநாள் போட்டியான இதில் 73 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் சதத்தை எட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 105 ரன்களையும் தில்ஷன் 146 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 161 ரன்களில் சிக்சர் இல்லாதது ஒரு புதிய சாதனை. 332 ரன்களில் மொத்தமே ஒரு சிக்சர் என்பது சாதனை அல்ல ஏனெனில் தென்னாப்பிரிக்கா ஒருமுறை 354 ரன்கள் எடுத்த போது ஒரேயொரு சிக்சரை மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கையில் வந்த 2 கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. ஒரு அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பும் கோட்டை விடப்பட்டது. மேலும், ஒட்டுமொத்தமாகவே பீல்டிங் படு மோசமாக அமைந்தது.
தில்ஷன், சங்கக்காராவை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்த விக்கெட் விழவில்லை. 37.2 ஓவர்களில் 200 ரன்கள் இருந்த இலங்கை 47.2 ஓவர்களில், சரியாக 10 ஓவர்களில் 100 ரன்கள் விளாசி 47.2வது ஓவரில் 300 ரன்களை எட்டியது.
தில்ஷன், சங்கக்காரா இணைந்து 2-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் சேர்த்தனர்.