Published : 07 Apr 2014 12:00 PM
Last Updated : 07 Apr 2014 12:00 PM

டேவிஸ் கோப்பை: மாற்று ஒற்றையரில் சோம்தேவ் வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி மாற்று ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் தேவ் வர்மன் தென் கொரியாவின் யாங் கியூவை வீழ்த்தினார். இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஆசியா/ ஓசனியா குரூப் -1 பிரிவுக்கான இரண்டாவது சுற்று ஆட்டம் தென்கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியா- தென் கொரியா அணிகள் மோதின. இச்சுற்று மொத்தம் 4 ஒற்றையர் பிரிவு ஆட்டங்களையும், ஒரு இரட்டையர் பிரிவு ஆட்டத்தையும் கொண்டது..

இதில், முதல்நாள் நடைபெற்ற இரு ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் ஒன்றில் சோம்தேவ் வெற்றி பெற்றிருந்தார். மற்றொரு வீரர் சனம் சிங் தோல்வியடைந்தார். சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் போபண்ணா- மைனேனி ஜோடி வெற்றி பெற்றது.

இதையடுத்து 2-1 என்ற முன்னிலையுடன் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியா பங்கேற்றது.

சோம்தேவ் வெற்றி

முதலில் நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் யாங்-கியூவை எதிர்கொண்டார் சோம் தேவ் தேவ்வர்மன். இப்போட் டியில், 6-4, 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சோம்தேவ் வெற்றி பெற்றார். இதன் மூலம் இப்பிரிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது; உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

இப்போட்டியின்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை சோம்தேவ் வெளிப்படுத்தினார். அவரை போபண்ணா, மைனேனி உள்ளிட்ட வீரர்கள் ட்விட்டர் மூலம் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இரு மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்த நிலையில், சோம்தேவின் வெற்றி மூலம் இந்தியா உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்று விட்டதால், சனம் சிங் பங்கேற்கவிருந்த 2-வது மாற்று ஒற்றையர் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கு 2008-ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் இந்தியா தகுதி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x