பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி
Updated on
2 min read

பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொண்டது பற்றி உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சீனிவாசன் இதனைச் செய்திருக்கக் கூடாது. அவரது நடவடிக்கைகளில் முரண்பட்ட லாப நோக்குடைய இரட்டை நலன் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்படியிருக்கையில் அவர் பிசிசிஐ கூட்டத்தில் கலந்து கொள்வது எங்ஙணம்?

சீனிவாசனின் இந்த நடவடிக்கை பற்றிய நிலைப்பாட்டை வழக்கறிஞர் கபில் சிபல் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சீனிவாசனுக்கு இரட்டை லாப நோக்க முரண் நலன்கள் இருப்பதாகக் கூறி அவர் பிசிசிஐ கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தை சீனிவாசன் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில் சீனிவாசன், மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் ‘நீதிமன்ற உத்தரவை இழிவு படுத்தியுள்ளனர்’ என்று கண்டிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளான டி.எஸ். தாக்கூர், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வந்தது.

பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நளினி சிதம்பரம், ”பிசிசிஐ விதி 6.2.4-இன் மீதான திருத்தம் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிரிக்கெட் நிர்வாகியாக அவர் எதிர்காலத்திலோ, தற்போதோ கூட்டங்களில் கலந்து கொண்டு கிரிக்கெட் நிர்வாகியாக தலைமையேற்க முடியாது. ” என்றார்.

இதனையடுத்து, நீதிபதி தாக்கூர், “அவர் (சீனிவாசன்) இப்படி செய்திருக்கக் கூடாது. அவர் இதனைச் செய்திருக்கக் கூடாது, உங்களை (கபில் சிபல்) போன்றவர்கள் அவருக்கு ஆலோசகராக இருக்கிறீர்கள், இப்படியிருக்கையில் அவர் இப்படி நடந்து கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது. அவர் செய்தது எங்களுக்கு திருப்திகரமாக இல்லை.

இதற்கு பதில் அளித்த கபில் சிபல், “அவர் (சீனிவாசன்) சட்ட ரீதியாக இதனைச் செய்ய முடியாத நிலையில் இருந்தாலும், பிசிசிஐ -யில் சிலர் இவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். பிசிசிஐ என்பது வெறும் அதன் தலைவர் தொடர்பானது மட்டுமல்ல, புகார்கள் எதுவும் இல்லை. தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டது அவ்வளவே.’ என்றார்.

இதற்கு நீதிபதி தாக்கூர், “தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்த நிலையில், நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது என்றே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அவர் தேர்தலில் நிற்க தகுதியில்லை என்று கூறியதை நீங்கள் எப்படி புறக்கணிக்கலாம்? தேர்தலில் போட்டியிடமுடியாது என்று தகுதியிழப்பு செய்த நபர் ஒருவர் எப்படி கிரிக்கெட் நிர்வாகியாக அவர் பொறுப்பு வகிக்க முடியும்?

அதற்கு கபில் சிபல், “கிரிக்கெட் ஆட்டத்தை அவர் அவ்வளவு நேசிக்கிறார். ஆனால் இது உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் பட்சத்தில் நாங்கள் இப்படி செய்திருக்க மாட்டோம்.” என்று கபில் சிபல் கூறினார்.

இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஏன் சீனிவாசனுக்கு வழங்கக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தல் மேற்கொண்ட போது வெள்ளிக்கிழமை வரை கபில் சிபல் அவகாசம் கேட்டார். சீனிவாசனுடன் ஆலோசித்து விட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்க விசாரணையை 27-ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in