

மைக்கேல் கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியாவால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்று ஷேன் வார்ன் கூறியுள்ளார்.
“மைக்கேல் கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. 12 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சிதறுண்டு கிடந்தது. கிளார்க் கேப்டன்சிக்குப் பிறகே ஆஷஸ் தொடரை 5-0 என்றும் தென் ஆப்பிரிக்காவை தென் ஆப்பிரிக்க மண்ணிலும் வீழ்த்த முடிந்தது.
ஒரு கேப்டனாக கிளார்க்கின் கற்பனைத்திறனும், ஆக்ரோஷமும் நாம் அறிந்ததே. எனவே அவர் உடல் தகுதி பெற்றால் முதல் போட்டியில் அவர் விளையாட வேண்டியது அவசியம். ஜார்ஜ் பெய்லி தேறமாட்டார். அவரை நீக்கி விட்டு கிளார்க்கை அணியில் சேர்க்க வேண்டும். நல்ல பவுலர்கள் ஜார்ஜ் பெய்லியை வீழ்த்தி விடுவார்கள். பெய்லியை நீக்கி விட்டால், பின்ச், வார்னர், வாட்சன், ஸ்மித், கிளார்க் என்று பலமான லைன் - அப் கிடைக்கிறது.
பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க் மிக முக்கியமானவர். வெள்ளைப் பந்தை அவர் பேச வைக்கிறார். 3 இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியா வைத்துக் கொள்ளாது என்றாலும் ஜான்சன், ஸ்டார்க், பாக்னர் உள்ள ஃபார்மில் அதனையும் செய்து பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவை ஆஸ்திரேலியா எடுக்கலாம்.” இவ்வாறு கூறினார் ஷேன் வார்ன்.