

2 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியும் அந்தப் பிட்ச்களுக்கு ஏற்ப இந்திய வீரர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவில்லை என்று 1983 உலகக்கோப்பை நாயகன் மொஹீந்தர் அமர்நாத் கவலை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்திய பேட்ஸ்மென்கள், பவுலர்கள் இருவருமே ஆஸ்திரேலியாவில் எதிர்கொண்டு வரும் பிரச்சினை என்னவெனில் அந்த பிட்ச்களின் இயல்பை புரிந்து கொள்ளவில்லை என்பதே. இத்தனைக்கும் 2 மாதங்களாக அங்கு விளையாடி வருகின்றனர்.
பேட்ஸ்மென்கள் இன்னமும் பிட்சின் பவுன்சை புரிந்து கொள்ளவில்லை. இங்கு இடுப்புக்குக் கீழ் பந்து வருமென்றால், ஆஸ்திரேலியாவில் மார்புக்கு வரும். மட்டையின் மேல்பகுதிக்கே பந்துகள் வரும். ஆகவே துணைக்கண்டங்களில் ஆடுவதிலிருந்து மாறுபட்ட ஆட்ட உத்தியைக் கடைபிடிக்க வேண்டும்.
அதேபோல், இந்திய அணியின் பலம் சுழற்பந்து வீச்சே. ஒரு லெக் ஸ்பின்னரை அணியில் தேர்வு செய்யாமல் தேர்வுக்குழுவினர் தவறு செய்து விட்டனர்.
அமித் மிஸ்ராவை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆஸ்திரேலிய பிட்ச்களில் அவர் முக்கிய பங்கு வகித்திருப்பார் என்றே நான் கருதுகிறேன். 1985 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மினி உலகக்கோப்பையில் எல்.சிவராமகிருஷ்ணன் முக்கியப் பங்கு வகித்தார்.”
இவ்வாறு கூறினார் மொஹீந்தர் அமர்நாத்.
மொஹீந்தர் அமர்நாத் 1983 உலகக்கோப்பை மற்றும் 1985 மினி உலகக்கோப்பை போட்டி வெற்றிகளில் பெரும்பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மிக முக்கியமான ஆட்டம் என்னவெனில் பாகிஸ்தான் தொடர் அதன் பிறகு மே.இ.தீவுகள் தொடர். தொடர்ச்சியாக நடைபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் 1083 ரன்களை விளாசித் தள்ளினார் அமர்நாத். அதிலும் பாகிஸ்தானில் இம்ரான், சர்பராஸ், சிகந்தர் பக்த் போன்ற அச்சுறுத்தும் பவுலர்கள் இருந்தனர். குறிப்பாக இம்ரான் கான் பயங்கரமான பார்மில் இருந்தார். அந்தத் தொடரில் 6 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இம்ரான்.
தொடர்ந்து மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 598 ரன்களை எடுத்தார். குறிப்பாக, லாய்ட் கேப்டன்சியில் எந்த ஒரு அயல்நாட்டு வீரரும் மே.இ.தீவுகளில் 600 ரன்கள் பக்கம் டெஸ்ட் தொடரில் அப்போது எடுத்திருக்கவில்லை. மால்கம் மார்ஷல் அவரது உச்சத்தில் இருந்தார். ராபர்ட்ஸ், ஹோல்டிங் என்று வேகப்பந்து வீச்சு அதன் உச்சத்தில் இருந்த சமயத்தில் மிகவும் தைரியமாக ஆடியவர் மொஹீந்தர் அமர்நாத்.
இன்றும் மே.இ.தீவுகள் அணி அதன் உச்சத்தில் இருந்த போது அதன் பந்து வீச்சை நன்றாக ஆடிய பேட்ஸ்மென்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், மஜித் கான், மொஹீந்தர் அமர்நாத் ஆகியோரை விவ் ரிச்சர்ட்ஸ் கூறாமல் இருக்க மாட்டார்.