

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, முத்தரப்பு ஒரு நாள் தொடருக்குப் பிறகு கிடைத்த ஓய்வு மிக முக்கியமான காரணம் என்று கூறினார் தோனி.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்ட வெற்றியைத் தவிர உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஒன்றும் செய்துவிட முடியவில்லையே என்று கேட்டபோது, தோனி, “அந்தப் போட்டியில் பெற்ற வெற்றியை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்?” என்றார் சற்றே எதிர்ப்புடன்.
"அந்த 8-10 நாட்கள் ஓய்வு பெரிய அளவுக்கு வீரர்களுக்கு உதவியது. அனைவரும் பிடித்ததை அந்த நாட்களில் செய்தனர். இந்த ஆஸ்திரேலிய பயணத்தை 3 பிரிவுகளாக பிரிக்கலாம். டெஸ்ட் போட்டிகள் பிறகு ஒருநாள் தொடர் பிறகு உலகக்கோப்பை. அதாவது டெஸ்ட், முத்தரப்பு ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒரு ஓய்வு இடைவெளி, பிறகு உலகக்கோப்பை. எனவே உலகக்கோப்பையை ஒரு புதிய தொடக்கமாகக் கொண்டோம்.
பாகிஸ்தானுக்கு எதிராக சில பேட்ஸ்மென்கள் பேட்டிங்கில் சிறப்புற்றனர். பவுலர்கள் தங்கள் திறமையின் கீற்றுகளை வெளிப்படுத்தினர். ஆனால் ஒரு அணியாகத் திரண்டு ஆடுவதுதான் முக்கியம், இந்த விஷயத்தில் இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய திருப்தியை அளிக்கிறது. இந்த வெற்றிதான் வரும் போட்டிகளுக்கான அளவுகோல்.
நிர்வாக மட்டத்தில் அணியின் உணர்வுகளை உயர்ந்த நிலையில் நம்பிக்கையுடன் தக்க வைக்க முயன்றோம். இல்லையெனில் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புவது கடினம். அனைவரும் புன்னகையுடன் இருக்கின்றனர். நிறைய பிரச்சினைகளையும், கடினமான நிலைமைகளையும் நாம் சமாளிக்க வேண்டி வந்தாலும் முகத்தில் மாறாத உண்மையான புன்னகை அவசியம். புன்னகையுடன் முன்னேற என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்தால் முடிவுகள் நம்மைப் பின் தொடரும்.
இது ஒரு ஆட்டமாக இருக்கலாம், ஒரு தொடர் முழுதிலுமாக இருக்கலாம். இப்படித்தான் எந்த ஒரு விளையாட்டையும் நான் பார்க்கிறேன்.” என்றார்.