Published : 04 Feb 2015 03:41 PM
Last Updated : 04 Feb 2015 03:41 PM

பேஸ்புக், வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கும் வசதி: சிவகங்கை மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டக் காவல் துறை சார்பில் பேஸ் புக், வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் வசதியை மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டக் காவல் துறை சார்பாக பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக காவல் துறையின் சேவையைப் பெரும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட சிவகங்கை போலீஸ் ஆன்லைன் ஹெல்ப் சேவை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் sivagangaipolice என்ற பேஸ் புக் பக்கத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன. பேஸ்புக் வாயிலாக சிவகங்கை மாவட்டக் காவல் துறை இணையதள இணைப்புக்குச் செல்லும் வசதியும் உள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகள், புகார்களை இத்தளத் தின் வாயிலாகத் தெரிவிக்கலாம்.

சமூக வலைதளமான வாட்ஸ் அப் 9498101670 என்ற எண்ணில் செயல்படுகிறது. இதன் மூலமும் புகார்கள், தகவல்களைத் தெரிவிக் கலாம்.

www.sivangangaipolice.com என்ற இணைய தள முகவரியும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே இந்த வலைதள முகவரியில் சென்று சிவகங்கை மாவட்டக் காவல் துறை பற்றிய முழு விவரங்களை அறியலாம். மேலும் தமிழக காவல் துறையினரின் இணையதள சேவைகள் முழுவதும் பெறும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆன்லைனிலும் புகார் தெரிவிக்கலாம். மேலும் பாஸ் போர்ட் சம்பந்தமான விவரங்கள், காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள், அடையாளம் காணப்படாத பிரேதங்கள், வாகனங்களை வாங்குவதற்குமுன் அந்த வாகனங்கள் குற்ற வழக்குக ளில் சம்பந்தப்பட்டவை தானா என்பதை அறியும் வசதி, துப்பாக்கி அனுமதி, பிரவுசிங் சென்டர் வைப்பதற்கான அனுமதி படிவம், தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் போன்களை அறியும் வசதி, காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்க ளது சம்பளம் மற்றும் இதர பணப் பரிவர்த்தனைகளை எளிதில் அறியும் விதமாக கருவூலத்துடன் இணைந்த வசதி உள்ளன. ஆன்லைன் பதிவு விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த இணையதளங்களை மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் சிவகங்கையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆன்லைன் மூலம் புகார் தெரிவிப்போரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். எந்த நேரத்திலும் இதில் புகார் தரலாம். காவல் நிலையத்துக்கு வரமுடியாமல் தவிக்கும் முதியவர்களும் வீட்டில் இருந்தே புகார் தரலாம். அவர்களைத் தேடி போலீஸார் சென்று புகார் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் செல்போன்களுக்கு தகுந்தவாறு இந்த வலைதளம் விரியும் வகையில் ‘பூட்ஸ்ட்ராப்’ வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ் புக், வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்திய தொழில்நுட்பப் பிரிவு ஆய்வாளர் சுந்தரவடிவேல், சார்பு-ஆய்வாளர் திருமுருகன், ஏட்டு செந்தில்குமார் ஆகியோரை பாராட்டுகிறார் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x