Last Updated : 25 Feb, 2015 08:02 PM

 

Published : 25 Feb 2015 08:02 PM
Last Updated : 25 Feb 2015 08:02 PM

மக்களுக்கே முதல் பயன், பிறகுதான் உற்பத்தி வரி: பெட்ரோலிய அமைச்சர்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் பயன்களை மக்களுக்கே முதலில் அளித்துள்ளோம் என்கிறார் மத்திய பெட்ரோலிய அமைச்சர்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பை எதிர்த்து நாடு முழுதும் கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில், விலைக்குறைப்பின் பயன்கள் முதலில் நுகர்வோருக்கே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

"கச்சா எண்ணெய் விலைகள் உலக அளவில் சரிந்ததன் பயன் முதலில் மக்களுக்கே சென்றடைந்துள்ளது. உற்பத்தி வரி ஏன் உயர்த்தப்பட்டது என்றால் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதித்துறைக்கு சேமிக்க வேண்டிய கடமை உள்ளது.

டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு ரூ.16.29 மற்றும் ரூ.12.35 குறைக்கப்பட்டது. ஆனால் இவற்றின் மீதான உற்பத்தி வரிகளோ முறையே லிட்டருக்கு ரூ.7.98 மற்றும் ரூ.6.70 என்று மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன விளங்குகிறது எனில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பயன்கள் மக்களுக்கே அதிகமாக அளிக்கப்பட்டுள்ளன என்பதே.

மேலும், இந்த உற்பத்தி வரி அதிகரிப்பினால் கிடைக்கும் வருவாய் சாலைத்துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படலாம். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும், பொருளாதார நடவடிக்கைகளும் அதிகரிக்கும்.” என்று கூறினார் மத்திய அமைச்சர் பிரதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x