

பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த உலகக் கோப்பை லீக் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
311 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. 1 ரன் மட்டுமே சேர்த்த நிலையில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. மிஸ்பா - ஷோயிப் ஜோடி சிறுது நிலைத்து ஆடினாலும், மிஸ்பா 7 ரன்களுக்கு வீழ்ந்தார்.
தொடர்ந்து ஷோயிப் - உமர் அக்மல் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 80 ரன்களை பொறுமையாக சேர்த்தாலும் அணியின் வெற்றிக்கு அது பயன்படவில்லை. இருவரும் முறையே 50 மற்றும் 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். நட்சத்திர வீரர் அப்ரிடியும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தால். முடிவில் பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மே.இ.தீவுகளின் பந்துவீச்சாளர்கள் டெய்லர் மற்றும் ரஸ்ஸல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், மே.இ.தீவுகளை பேட்டிங் செய்ய பணித்தது. நிதனமாக துவங்கிய மே.இ.தீவுகள் ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தாலும், அடுத்து வந்த வீரர்கள் பொறுப்பாக ஆடி அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். பிராவோ, ராம்தின், சிம்மன்ஸ் என நிலைத்து நின்று ஆடினர். ரஸ்ஸல் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்.
முதல் போட்டியில் அயர்லாந்து அணியிடம் தோல்வி கண்ட மே.இ.தீவுகள் அணிக்கு இந்த வெற்றி தேவைப்பட்ட உற்சாகத்தை அளித்துள்ளது. பாகிஸ்தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. இன்றைய தோல்வி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கண்டுள்ள மோசமான தோல்வியாகும்.