Published : 28 Feb 2015 10:19 AM
Last Updated : 28 Feb 2015 10:19 AM

உலகக் கோப்பை 2015: டிவில்லியர்ஸ் சாதனைத் துளிகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 257 ரன்கள் வித்தியாசத் தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.

இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி கண்ட அணி என்ற பெருமையை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது தென் ஆப்பிரிக்கா.

மேற்கிந்தியத் தீவுகள் பவுலர்களை வதம் செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 66 பந்துகளில் 8 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார்.

2-வது அதிவேக சதம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 52 பந்துகளில் சதமடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்தவர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்தார் டிவில்லியர்ஸ். 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக அயர் லாந்தின் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதமடித்ததே உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட அதி வேக சதமாக உள்ளது.

டிவில்லியர்ஸ் ஹாட்ரிக்

64 பந்துகளில் 150 ரன்களை எட்டி யதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 150 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார் டிவில்லியர்ஸ். இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேக அரைசதம், அதிவேக சதம், அதிவேக 150 என மூன்று சாதனைகளும் டிவில்லியர்ஸ் வசமாகியுள்ளன. இந்த 3 சாதனைகளையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவே நிகழ்த் தியுள்ளார் டிவில்லியர்ஸ்.

சாதனைத் துளிகள்..

162

நேற்று 162 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையின் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்ததோடு, ஒருநாள் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கர்கள் வரிசையில் 4-வது இடத்தைப் பிடித்தார் டிவில்லியர்ஸ்.

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கர் என்ற பெருமை கேரி கிர்ஸ்டனிடம் (188) உள்ளது.

9

ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டனாக 9-வது சதத்தை அடித்துள்ளார் டிவில்லியர்ஸ். இதன்மூலம் முன்னாள் கேப்டன் ஸ்மித்தின் சாதனையை (8 சதம்) முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டி வரலாற்றில் ரிக்கி பாண்டிங் (22 சதம்), கங்குலி (11), ஜெயசூர்யா (10) ஆகியோர் மட்டுமே டிவில்லியர்ஸைவிட அதிக சதம் அடித்த கேப்டன்கள்.

6

உலகக் கோப்பையில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை டிவில்லியர்ஸோடு சேர்த்து 6 பேர் மட்டுமே அடித்துள்ளனர். இதில் சச்சின் 6 சதங்களும், பாண்டிங் 5 சதங்களும் அடித்துள்ளனர்.

408

நேற்று 408 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (ஓர் இன்னிங்ஸில்) குவித்த அணிகள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்தது தென் ஆப்பிரிக்கா. 2007 பெர்முடாவுக்கு எதிராக இந்தியா 413 ரன்கள் குவித்ததே உலகக் கோப்பையில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக உள்ளது.

0

பேட்டிங் பவர் பிளேயின்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு பந்தைக்கூட வீணடிக்கவில்லை. அதில் விக்கெட் இழப்பின்றி 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்தது.

104 10 ஓவர்களில் 104 ரன்களை கொடுத்ததன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர்களில் 2-வது இடத்தைப் பிடித்தார் ஹோல்டர். உலகக் கோப்பையில் அதிக ரன்களை வாரி வழங்கிய மேற்கிந்தியத் தீவுகள் பவுலரும் இவர்தான்.

76

ஜேசன் ஹோல்டர் வீசிய 21 பந்துகளை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 76 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் 2001-லிருந்து தற்போது வரையிலான காலத்தில் ஒரு பவுலருக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமை டிவில்லியர்ஸுக்கு கிடைத்தது.

24

டிவில்லியர்ஸ்-பெஹார்டியன் ஜோடியின் ரன் ரேட் விகிதம் 24. இந்த ஜோடி 20 பந்துகளில் 80 ரன்கள் குவித்தது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 ரன்கள் சேர்த்த ஜோடிகளில் இதுதான் சிறந்த ரன் ரேட்.

222

தென் ஆப்பிரிக்கா கடைசி 15 ஓவர்களில் 222 ரன்கள் குவித்தது. 2001 முதல் தற்போது வரையிலான காலத்தில் கடைசி 15 ஓவர்களில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். முதல் அதிகபட்ச ரன் சாதனையும் தென் ஆப்பிரிக்கா வசமே உள்ளது. கடந்த ஜனவரியில் இதே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 230 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா.

3

ஒருநாள் போட்டியில் அதிமுறை (3 முறை) எதிரணிகளை 400 ரன்களுக்கு மேல் குவிக்கவிட்டுள்ளது மேற்கிந்தியத் தீவுகள். தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும் இரு முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x