Last Updated : 01 Feb, 2015 01:50 PM

 

Published : 01 Feb 2015 01:50 PM
Last Updated : 01 Feb 2015 01:50 PM

1992: தடுமாறிச் சுதாரித்த பாகிஸ்தான்

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் சுலபமாக அரையி றுதிக்குத் தகுதி பெற்றன. ஆனால் பாகிஸ்தான் அணிக்குக் கடைசிப் போட்டிவரை சிக்கல் நீடித்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் கிறைட்சர்ச்சில் மோதியது. இந்தப் போட்டியில் லீக் சுற்றில் எந்த அணியுடனும் தோற்காத நியூசிலாந்து தோல்வி யைச் சந்தித்தது. பாகிஸ்தான் கடைசி சுற்றில் வெற்றி பெற்றும் உடனே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் புள்ளி 9ஆக மட்டுமே இருந்தது.

இந்தப் போட்டி நடைபெற்ற அதே நாளில் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதின. மேற்கிந்திய அணி 8 புள்ளிகள் பெற்றிருந்தது. இந்தப் போட்டி யில் வென்றால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், போட்டியில் மேற்கிந்திய அணி தோல்வியைத் தழுவியது. எனவே ஒரு புள்ளி வித்தியாசத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

முதல் அரையிறுதி

தட்டுத் தடுமாறி அரையிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் நியூசி லாந்தை எதிர்கொண்டது. ஆக்லாந்தில் மார்ச் 21 அன்று போட்டி நடந்தது. முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. மத்திய வரிசையில் மார்டின் குரோவும் (91) ரூதர்போர்டும் (50) நியூசிலாந்து 262 ரன்கள் எடுக்க உதவினார்கள்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தது. நியுசிலாந்து ரசிகர்கள் கொண் டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போதுதான் இன்சமாம் உல்-ஹக் களத்தில் இறங்கினார். லீக் சுற்றில் இவர் சரியாக ஆடவில்லை என்பதால் அவர் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

சந்தித்த முதல் பந்தில் இருந்தே வெளுத்து வாங்கத் தொடங்கினார் இன்சமாம். எந்த பந்தையும் மிச்சம் வைக்கவில்லை. பவுண்டரிகளாக விளாசினார். எதிர்முனையில் அனுபவ வீரர் ஜாவித் மியாண்டாட் அவரைச் சிறப்பாக வழி நடத்தி ரன் குவிக்க உதவினார். இன்றைய இருபது ஓவர் ஆட்டத்தை அன்றே இன்சமாம் விளையாடினார். 37 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 60 ரன்களைக் குவித்து பாகிஸ்தானை வெற்றிப் பக்கம் அழைத்து வந்தார்.

தொடர் முழுவதும் தடுமாறிவந்த பாகிஸ்தான் அரையிறுதியில் இன்சமாமின் அதிரடியால் இறுதிப் போட்டிக்குச் சென்றது. தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அந்த ஒரு இன்னிங் ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

இரண்டாவது அரையிறுதி

பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாது அரையிறுதி மார்ச் 22 அன்று சிட்னியில் நடைபெற்றது. அதிகம் எதிர்ப்பார்க்கப்படாத தென் ஆப்பிரிக்காவும் பலமிக்க இங்கிலாந்தும் மோதின. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கெப்ளர் வெசல்ஸ் இங்கிலாந்தை முதலில் பேட் செய்யச் சொன்னார். மழை காரண மாக ஓவர்கள் 45 ஆக குறைக்கப் பட்டன. கிரஹாம் ஹிக் சேர்த்த 82 ரன் உதவியுடன் இங்கிலாந்து 252 ரன்களை எடுத்தது.

இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் வீழ்ச்சியும் சராசரி ரன் விகிதமும் சரி சமமாக ஏறிக் கொண்டே இருந்தது. போட்டி பரபரப்பான கட்டத்துக்கு வந்துகொண்டிருந்தது. 13 பந்து கள் மீதமிருக்கையில் தென் ஆப்பிரிக்காவுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பிரையன் மேக்மிலனும், டேவ் ரிச்சர்ட்சனும் களத்தில் இருந்தார்கள். இருவருமே மட்டையாளர்கள். எனவே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது வருண பகவான் சற்றே எட்டிப் பார்க்க, 12 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது எல்லோருக்குமே பேரதிர்ச்சி.புதிய விதிப்படி 1 பந்தில் 21 ரன் என்ற இலக்கு பெரிய ஸ்கிரீனில் பளிச்சிட்டது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது. மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த மழை விதி கடும் விவாதத்தைக் கிளப்பியது. மழையின் புண்ணியத்தால் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டி

மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருக்க இங்கிலாந்தும் பாகிஸ்தானும் கோப்பைக்காக மல்லுக்கட்டின. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேற இம்ரான் கான், மியாண்டட், இன்சமாம் ஆகியோரது பங்களிப்புகளுடன், வாசிம் அக்ரமின் கடைசி நேர அதிரடி காரணமாக பாகிஸ்தான் 249 ரன்களைக் குவித்தது.

இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியின் முன்கள வீரர்கள் அடுத்தடுத்த சொதப்ப, ஃபேர்பிரதரும் லாம்ப்பும் இங்கிலாந்தை சரிவில் இருந்து மீட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது வாசிம் அக்ரம் சிறப்பாக வீசிய இரண்டு பந்துகள்தான் அந்த அணி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தது. லாம்ப்பும், லூயிஸும் வாசிமின் அற்புதமான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஸ்டெம்புகளைச் சிதறவிட இங்கிலாந்து மீண்டும் தடுமாறியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தர 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து தோற்றது.

தொடக்கத்தில் சறுக்கிய பாகிஸ்தான் அணி பின்னர் சுதாரித்து ஆடி சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை பெற்ற தந்த கையோடு இம்ரான்கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

முதல் விருது

முதல் நான்கு உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருது அறிமுகப்படுத்தப்படவில்லை. 1992-ம் ஆண்டு உலகக் கோப் பைத் தொடரில்தான் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த முதல் விருதை நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோ பெற்றார். 9 போட்டிகளில் விளையாடி 456 ரன்களை அவர் குவித்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் சோகம்

மூன்று முறை உலகக் கோப்பைத் தொடரில் இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல முடியாமல் இங்கிலாந்துக்கு துரதிர்ஷ்டம் துரத்தியது. 1979-ம் ஆண்டில் மேற்கிந்திய அணிக்கு எதிராகவும், 1987-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இறுதி ஆட்டத்தில் தோற்ற இந்த அணி, இந்த முறை பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. அதுமட்டுமல்ல, அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது இதுதான் கடைசி முறையும்கூட. அதன் பிறகு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்கள் எதிலும் இங்கிலாந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x