Last Updated : 03 Feb, 2015 09:53 AM

Published : 03 Feb 2015 09:53 AM
Last Updated : 03 Feb 2015 09:53 AM

1996 உலகக் கோப்பை: இந்திய அணியின் பயணம்

லாகூரில் இருந்த பாகிஸ்தான் அணித் தலைவரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான வஸீம் அக்ரமின் வீட்டின் மீது கல் எறியப்பட்டது. மார்ச் 9 அன்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதை அடுத்து இந்தச் சம்பவம் நடந்தது.

அக்ரம் அந்தப் போட்டியில் மோசமாக விளையாடினார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் உடல்நலமின்மை காரணமாக அதில் விளையாடவே இல்லை. அப்புறம் என்ன பிரச்சினை?

அதுதான் பிரச்சினை. இந்தியாவுடனான போட்டி, அதுவும் தோற்றவர் போட்டியிலிருந்தே வெளியேறும் சுற்று என்று வரும்போது அதில் எப்படி ஆடாமல் இருக்கலாம்? போர் நடக்கும்போது கால் வலிக்கிறது, இடுப்பு சுளுக்கு என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாமா? இதுதான் இந்தியா பாகிஸ்தான் போட்டி விஷயத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களின் மனநிலை. ஆடாத அக்ரம் வாங்கிக் கட்டிக்கொண்டது இப்படித்தான்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. 1992 உலகக் கோப்பைப் போட்டி யில் பாகிஸ்தான் கோப்பையை வென்றாலும் முதல் சுற்று ஆட்டத் தில் இந்தியாவிடம் தோற்றது. அதற்குப் பழிதீர்ப்பதற்கான நல்ல சந்தர்ப்பமாக இதை அந்த அணி பார்த்திருக்கக்கூடும். அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஆடவில்லை என்றாலும் பாகிஸ்தானின் வலிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸை வென்ற இந்தியா முதலில் மட்டை பிடித்தது. நவ்ஜோத் சிங் சித்துவும் டெண்டுல்கரும் சிறப்பான அடித்தளம் அமைத்தார்கள். ஸ்கோர் 90 ஆக இருக்கும்போது சச்சின் (31) ஆட்டமிழந்தார்.

பிறகு வந்த சஞ்சய் மஞ்ரேக்கர், முகம்மது அசாருதீன், வினோத் காம்ப்ளி ஆகியோர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும் ஒவ்வொருவரும் தலா 20க்கு மேல் அடித்தார்கள். சித்து 93 ரன் எடுத்தார். அஜய் ஜடேஜா 45. அணியின் ஸ்கோர் 287-8.

ஆவேசத்துடன் இலக்கைத் துரத்திய பாகிஸ்தானின் அமீர் சோஹைலும் சயீத் அன்வரும் வலுவான தொடக்கத்தைத் தந்தார்கள். இந்தியா 287 ரன் எடுத்ததும் ஆனந்தக் கூத்தாடிய பெங்களூர் ரசிகர்கள் முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 84 ரன்களை எடுத்ததும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ஆனால் நாத் பந்தில் அன்வர் (48) விரைவிலேயே ஆட்டமிழந்தார். இந்திய ரசிகர்கள் சற்றே ஆசுவாசம் அடைந்தார்கள்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த சோஹைல் (55) ஆட்டமிழந்ததும் ஆட்டமிழந்த விதமும் விதம் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. போட்டியில் அனல் பறந்தது. வெங்கடேஷ் பிரசாதின் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரிக்கு விரட்டிய சோஹைல், பிரசாதை நோக்கி மட்டையை நீட்டி பவுண்டரியைக் காட்டி நக்கலாக ஏதோ சொன்னார்.

ஏற்கெனவே அதிக ரன்கள் கொடுத்ததால் ரசிகர்கள் பிரசாதைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தார்கள். சோஹைலின் பரிகாசமும் பிரசாத் தின் கோபத்தை எகிறவைத்தது.

ரோஷத்துடன் அடுத்த பந்தை வீசினார் பிரசாத். ஆஃப் ஸ்டெம்புக்கு நேரே வந்த அந்தப் பந்தையும் அதேபோல அடிக்க முயன்ற சோஹைல் ஆவேசமாக மட்டையை வீச, பந்து மட்டையில் படாமல் அவரைத் தாண்டிச் சென்று ஸ்டெம்பைச் சாய்த்தது. மைதானமே அதிர, உணர்ச்சிவசப்பட்ட பிரசாத் சோஹைலைக் கெட்ட வார்த்தையால் திட்டி அனுப்பினார். மேலும் 60 ரன் எடுப்பதற்குள் மேலும் 3 விக்கெட்கள் விழ, ஆட்டம் திசை மாறியது.

அந்தப் போட்டியில் கேப்டனாக இருந்த சோஹைல் அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருக்காவிட்டால் அந்த ஷாட்டை அப்படி ஆடியிருக்க மாட்டார் என்று சொல்லலாம். அணி வலுவான நிலையில் இருக்கும்போது அவருக்கு ஏற்பட்ட அதீத நம்பிக்கை தேவையற்ற ஆவேசத்தை ஏற்படுத்தி அவரது அணியின் சரிவுக்கு அவரே காரணமாக அமையும் சூழலை ஏற்படுத்திவிட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாவித் மியண்டாட் 38 ரன்னில் ரன் அவுட் ஆனார். இந்தியா 39 ரன் வித்தியாசத்தில் வென்றது. உள்ளூர் வீரர்களான பிரசாத்தும் அனில் கும்ப்ளேவும் ஆளுக்கு 3 விக்கெட்களை எடுத்தார்கள்.

எளிதான முதல் சுற்று

கால் இறுதியில் போராடி வென்ற இந்தியா முதல் சுற்றில் ஒப்பீட்டளவில் எளிதாகவே வென்றது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளிடம் தோற்ற இந்தியா ஜிம்பாப்வே, மேற்கிந்தியா, கென்யா அணி களைத் தோற்கடித்துக் கால் இறுதிக்கு வந்தது. மேற்கிந்தியா வின் பிரையன் லாரா அந்தப் போட்டியில் சோபிக்கவில்லை.

இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமைய, 173 ரன்களில் மேற்கிந்தியா சுருண்டது. டெண்டுல்கர் (70), காம்ப்ளி (33), அசாருதீன் (32), நயன் மோங்கியா (24) ஆகியோரின் ஆட்டத்தால் இந்தியா எளிதாக வென்றது. 10 ஓவர்களில் 22 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்த கர்ட்னி வால்ஷின் பந்து வீச்சுதான் மேற்கிந்திய அணியின் ஒரே ஆறுதல்.

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க் வா 126 ரன் அடித்தார். இந்தியாவில் சச்சின் 90 ரன் அடித்தார். இரண்டுமே அருமையான இன்னிங்ஸ்களாக அமைந்தன.

10 ஓவர்களில் ஷேர்ன் வார்ன் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தாலும் 28 ரன் மட்டுமே கொடுத்து மிகவும் சிக்கனமாகப் பந்து வீசினார். 5 விக்கெட்களை வீழ்த்திய டேமியன் ஃப்ளெமிங் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார் (ஆஸ்திரேலியா 258, இந்தியா 242).

அதிர்ச்சி அளித்த இலங்கை

இலங்கையுடனான போட்டிதான் இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த போட்டி யாக அமைந்தது. 3 விக்கெட் இழப்புக்கு 271 (சச்சின் 137, அசாருதீன் 72, மஞ்ரேகர் 32) எடுத்த எளிதாக வெல்லும் நம்பிக்கையுடன் பந்து வீச்சைத் தொடங்கியது. சனத் ஜெயசூர்யாவின் வடிவில் அதிர்ச்சி காத்திருந்தது. 76 பந்துகளில் 79 ரன் எடுத்த ஜெயசூர்யா, மனோஜ் பிரபாகரை வெளுத்து வாங்கிவிட்டார்.

4 ஓவரில் 47 ரன் கொடுத்த அவரை அசாருதீன் மீண்டும் பந்து வீச அழைக்கவே இல்லை. 16 பந்துகளில் 26 ரன் எடுத்து கலுவிதரண ஆட்டமிழந்தாலும் குருசின்ஹா, அர்ஜுன ரனதுங்கா, ஹஷன் திலகரத்னே ஆகியோரின் உறுதியான ஆட்டத்தால் எளிதாக வென்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் போட்டுக் கொடுத்த பலமான அஸ்திவரத்தைப் பயன்படுத்திப் பதற்றமில்லாமல் ரணதுங்கா அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

பிரபாகரின் அன்றைய வீச்சு அவரது கிரிக்கெட் வாழ்வையே முடிவுக்குக் கொண்டுவந்தது என்று சொன்னால் அதில் மிகை இருக்காது. கடைசியில் கும்ப்ளே பந்து வீச்சில் ஜெயசூர்யாவின் கேட்சைப் பிடித்தது ஒன்றுதான் பிரபாகருக்கு ஆறுதலான விஷயம்.

(இனி.. இலங்கையின் உறுதியும் இந்தியாவின் சொதப்பலும்…)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x