Last Updated : 13 Jan, 2015 02:44 PM

 

Published : 13 Jan 2015 02:44 PM
Last Updated : 13 Jan 2015 02:44 PM

டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை குறைவாக எடை போடவேண்டாம்: மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் குறைவாக எடைபோட வேண்டாம் என்று மற்ற அணிகளை மைக் ஹஸ்ஸி எச்சரித்துள்ளார்.

அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்திய அணி தங்கள் சாம்பியன் தகுதியை தக்க வைக்க கடுமையாக விளையாடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறுகிறார் ஹஸ்ஸி.

"இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் 2 மாதங்களாக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்கள் இங்குள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது பிட்ச்களின் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு அந்த அணி தயாராக இருக்கும்.

மேலும், இங்கிலாந்து, ஆஸி.யுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி. எனவே உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக அவர்கள் இங்கு நல்ல பயிற்சியில் இருப்பார்கள். ஆகவே டெஸ்ட் போட்டி முடிவுகளை வைத்து இந்திய அணியை குறைவாக எடைபோட வேண்டாம்.

0-2 என்ற முடிவை வைத்து நாம் அதிகம் பேச முடியாது. டெஸ்ட் தொடர்களில் அந்த அணி போராடியே தோற்றது என்பது ஒருபுறமிருக்க ஒருநாள் போட்டிகளில் அந்த அணி முற்றிலும் வித்தியாசமான அணி என்பதை மறந்து விட வேண்டாம்” என்றார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம் பற்றி கூறிய ஹஸ்ஸி, “பேட்டிங் முற்றிலும் மாறிவிட்டது. விராட் கோலி ரன்களைக் குவிக்கிறார். முரளி விஜய், அஜிங்கிய ரஹானே, கோலிக்கு சரிசம ஆதரவு அளிக்கின்றனர். இந்த மாதிரியான அணுகுமுறை 2011-ஆம் ஆண்டு தொடரில் இல்லை. பிறகு கே.எல்.ராகுல் என்ற புதிய திறமையை கண்டு பிடித்துள்ளனர். ஒரு இளம் வீரர் ஆஸ்திரேலியாவுக்கு வந்து முதல் சதம் எடுப்பது என்பது ஒரு சாதனைதான்.

இந்தியப் பந்துவீச்சு 2011 தொடரில் இருந்ததை விட நன்றாகவே இருந்தது என்றே நான் கூறுவேன். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல பவுலர்கள். ஆனால் நல்ல பவுலர்கள் என்பதற்கும் நன்றாக வீசுவது என்பதற்கும் வேறுபாடு உள்ளது. தொடர் முழுதிலுமே மோசமாக வீசினர். துல்லியமோ ஒழுக்கமோ பந்து வீச்சில் அறவேயில்லை. ஆனாலும் இந்தத் தொடரிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்றே நான் நினைக்கிறேன்.”

இவ்வாறு கூறினார் மைக் ஹஸ்ஸி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x