Last Updated : 11 Apr, 2014 12:33 PM

 

Published : 11 Apr 2014 12:33 PM
Last Updated : 11 Apr 2014 12:33 PM

ஐசிஎப்-சிட்டி போலீஸ் ஆட்டம் டிரா

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஐசிஎப்-சென்னை சிட்டி போலீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐசிஎப் அணி, சிட்டி போலீஸ் அணியுடன் டிரா செய்திருப்பது பின்னடைவாகவே கருதப்படுகிறது.

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஐசிஎப் அணியும், சென்னை சிட்டி போலீஸ் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் 20 நிமிடங்களிலேயே ஐசிஎப் அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிட்டி போலீஸ் அணியினுடைய கோல் கம்பத்தின் அருகில் ஐசிஎப் ஸ்டிரைக்கர் வெங்கடேசன் பந்தை எடுத்து வந்தபோது, அங்கு பெரிய அளவில் வீரர்கள் இல்லாத நிலையில், கோல் கீப்பர் ஜான் கில்பர்ட்டும் முன்னேறி வந்தார். அதனால் வெங்கடேசன் எளிதாக கோலடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்து அவருடைய காலின் மேல்பகுதியில் பட்டு கோல் கம்பத்துக்கு மேலே பறந்தது.

ஐசிஎப் முன்னிலை

எனினும் அடுத்த ஓரிரு நிமிடங்களில் அதை ஈடு செய்தார் வெங்கடேசன். 22-வது நிமிடத்தில் ஐசிஎப் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வலது பகுதியில் இருந்து மிட்பீல்டர் கார்த்திக் கோல் கம்பத்தை நோக்கி பந்தை “பாஸ்” செய்ய, அதை வாங்கி கோலடித்தார் வெங்கடேசன்.

இதன்பிறகு ஐசிஎப் அணிக்கு கார்த்திக் மற்றொரு கோல் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். அதில் அசோக் குமாரின் கோல் முயற்சியை சிட்டி போலீஸ் கோல் கீப்பர் கில்பர்ட் தகர்த்தார். இதன்பிறகு ஐசிஎப் அணிக்கு கிடைத்த மற்றொரு கோல் வாய்ப்பை பிரெட்டி தவறவிட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஐசிஎப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

சமன் செய்த கவிபாரதி

ஐசிஎப் அணி முதல் பாதி ஆட்டத்தில் ஆடிய அளவுக்கு 2-வது பாதி ஆட்டத்தில் விளையாடவில்லை. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் கோல் ஏரியா பகுதியில் சிட்டி போலீஸ் வீரர் விமல்ராஜை ஐசிஎப் இடது மிட்பீல்டர் சாந்தகுமார் கீழே தள்ளினார். இதையடுத்து போலீஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பை வழங்கினார் நடுவர். அதில் கவிபாரதி அசத்தலாக கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது. கவிபாரதி அடித்த 3-வது பெனால்டி கோல் இது. முன்னதாக இந்தியன் வங்கிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் இரு பெனால்டி கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றம்

இதன்பிறகு ஐசிஎப் அணியில் வெங்கடேசன், சாந்தகுமார் ஆகியோருக்குப் பதிலாக டேவிட், ஜெகன் ஆகியோர் மாற்று ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்டனர். ஐசிஎப் வீரர்கள் கார்த்திக், டேவிட் ஆகியோர் கடுமையாகப் போராடியபோதும் பலன் கிடைக்கவில்லை. ஐசிஎப் ஸ்டிரைக்கர் பிரெட்டி கடைசிக் கட்டத்தில் ஒரு கோல் வாய்ப்பை உருவாக்கினார். ஆனால் அதை டேவிட் வெளியில் அடித்து வீணடித்தார்.

சாய் அணிக்கு எதிரான ஆட்டத்தைப்போல் இந்த முறையும் கடைசி நிமிடங்களில் ஐசிஎப் கோலடித்து வெற்றி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐசிஎப் பின்கள வீரர் ததீவ்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தத்தில் ஐசிஎப் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. சாய் அணியுடன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்ட ஐசிஎப் அணி, இப்போது சிட்டி போலீஸ் அணியுடன் டிரா செய்துள்ளது. இனி வரும் ஆட்டங்களில் முன்னணி அணிகளுடன் ஐசிஎப் மோதவிருப்பதால் கடும் சவாலையும், நெருக்கடியையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியன் வங்கி அணியிடம் 4 கோல்களை வாங்கி 2-4 என்ற கணக்கில் தோல்வி கண்ட சிட்டி போலீஸ் அணி, இப்போது டிரா செய்திருப்பதன் மூலம் சற்று நம்பிக்கையை பெற்றிருக்கும் என்று நம்பலாம். சிட்டி போலீஸ் ஸ்டிரைக்கர் தேவராஜ் வழக்கம்போல் இந்த முறையும் அசத்தலாக ஆடினார்.

மத்திய உற்பத்தி வரித்துறை வெற்றி

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் மத்திய உற்பத்தி வரித்துறை அணி 1-0 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் யூத் பெஸ்டிவல் அணியைத் தோற்கடித்தது. மத்திய உற்பத்தி வரித்துறை வீரர் தேவராஜ் 78-வது நிமிடத்தில் கோலடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x