Published : 08 Jan 2015 12:31 PM
Last Updated : 08 Jan 2015 12:31 PM

ராகுல், கோலி சதம்: ஆஸி.க்கு ஈடுகொடுத்த இந்தியா 342/5

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் 3-ஆம் நாளான இன்று, ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் லோகேஷ் ராகுல், விராட் கோலி இருவரும் சதமடித்தனர்.

71 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தை இந்தியா துவக்கியது. ரோஹித் சர்மா 132 பந்துகளில் அரை சதம் கடந்தாலும் அடுத்த ஓவரிலேயே 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த கோலி அணியின் நிலையை ஸ்திரப்படுத்தினார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. உணவு இடைவேளை கடந்து ஆடி வந்த இவர்களின் ஆட்டத்தால் ஆஸி. வீரர்கள் சோர்வுறத் தொடங்கினர். தேநீர் இடைவேளைக்கு ஒரு ஓவர் முன்பாக லோகேஷ் ராகுல் 253 பந்துகளில் தனது சதத்தைக் கடந்தார். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தை ராகுல் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் 110 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டார் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க முயல, அது கேட்ச் ஆனது. ராகுல் ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 238 ரன்கள் எடுத்திருந்தது. கோலி - ராகுல் இணை பார்ட்னர்ஷிப்பில் 141 ரன்களைக் குவித்தது. மறுமுனையில் அசராமல் ஆடி வந்த கோலி 162 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். கேப்டன் பொறுப்பேற்ற பின் கோலி அடிக்கும் மூன்றாவது சதம் இது. இந்தத் தொடரில் கோலியின் 4-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்சன் வீசிய 100-வது ஓவரில் ரஹானே 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுரேஷ் ரெய்னா, வந்த வேகத்திலேயே முதல் பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. ஆனால் அடுத்து களமிறங்கிய சாஹா கடைசி வரை தனது விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 342 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கோலி 140 ரன்களுடனும், சாஹா 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 230 ரன்கள் பின்தங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x