

சங்கர் சஜ்ஜன் என்ற 17 வயது லெக்-ஸ்பின்னரை முன்னாள் இந்திய லெக்-ஸ்பின்னர் அனில் கும்ப்ளே அடையாளம் கண்டுள்ளார்.
அனில் கும்ப்ளே ஸ்பின் நட்சத்திரங்கள் என்ற பெயரில் 80 ஊர்கள் மற்றும் நகரங்களில் இளம் ஸ்பின் பந்துவீச்சாளர்களை தேடும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது.
இதில் பெங்களூருவில் வழக்கத்துக்கு மாறான ஒரு திறமை மிக்க லெக்-ஸ்பின்னரை அனில் கும்ப்ளே சில நாட்களுக்கு முன்பாக அடையாளம் கண்டார். அவர்தான் சங்கர் சஜ்ஜன் என்ற அந்த இளம் திறமையாவார்.
கர்நாடகா முழுதும் சுமார் 2,000 ஸ்பின்னர்களை பார்வையிட்டதில் 110 பேர் இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூருவில் உள்ள என்.ஆர்.ஏ. மைதானத்தில் அனில் கும்ப்ளே முன்னிலையில் தங்கள் ஸ்பின் திறமைகளை நிரூபிக்க அழைக்கப்பட்டனர்.
இதில் 20 ஸ்பின்னர்கள் இறுதிச் சுற்று சோதனைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் அனில் கும்ப்ளே மேற்பார்வையில் தங்கள் ஸ்பின் திறமைகளை நிரூபிக்க வேண்டும், இவர்களைல் 3 பேரைத் தேர்ந்தெடுத்து ரூ.1.லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.
சங்கர் சஜ்ஜன் கைகள் சரியான வடிவத்தில் அமையவில்லை. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவரது பந்து வீச்சு புதிர்கள் நிரம்பியுள்ளதாக அனில் கும்ப்ளே தெரிவித்தார்.
அவர் பற்றி அனில் கும்ப்ளே கூறும்போது, “சங்கர் சஜ்ஜனின் திறமையையும் உணர்வையும் கண்டு அசந்து போனேன். இறுதி 20 இளம் ஸ்பின்னர்கள் பட்டியலில் நான் அவரை சேர்க்கவில்லை. ஆனால், எங்களது முகாமில் ஒரு சிறப்பு வாய்ந்த வீரராக அவரைத் தேர்வு செய்துள்ளேன். இதுதான் உண்மையான இந்தியாவை பிரதிபலிக்கிறது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் புதைந்து கிடக்கும் திறமைகளின் இருப்பிடம்தான் இந்தியா. இவர்களது தேவை வாய்ப்பளிக்கப் பட வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி” என்றார்.
தன் 2 வயதில் தாயை இழந்த சங்கர் சஜ்ஜன் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சவால்களையும் கடந்து வந்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
அவர் தன்னைப் பற்றிக் கூறும்போது, “என்னுடைய மாமா ஷரண், என்னை இந்த முகாமில் கலந்து கொள்ள ஆதரவு அளித்தார். நான் அனில் கும்ப்ளேவின் மிகப்பெரிய ரசிகன், என் கனவு நினைவானது. எனது பயிற்சி மற்றும் கல்விக்கான தேவைகளை கும்ப்ளே பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.” என்றார்.