Published : 03 Jan 2015 03:05 PM
Last Updated : 03 Jan 2015 03:05 PM

நன்றாக பேட் செய்யும் இந்திய அணி ஒரு வெற்றியையாவது பெற்றிருக்க வேண்டும்: இயன் சாப்பல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 400 ரன்களுக்கும் மேல் எடுத்து வரும் இந்திய அணி குறைந்தது ஒரு டெஸ்ட் போட்டியில் இந்நேரம் வென்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயன் சாப்பல்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், தற்போதைய வர்ணனையாளருமான இயன் சாப்பல் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்தில் இது பற்றி கூறியதாவது:

"இந்திய அணி முதல் 3 டெஸ்ட் போட்டிகளை உற்று நோக்கினால் முதல் இன்னிங்ஸ்களில் 400 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இவ்வாறு தொடர்ந்து 400 ரன்களை முதல் இன்னிங்ஸ்களில் எடுப்பது மிகமிகக் கடினம். அதனைச் செய்த பிறகு இன்னமும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் இருப்பதற்கு பவுலிங்தான் காரணம்.

கீழ்வரிசை வீரர்கள் விரைவில் சரிந்தாலும் 400 ரன்களை ஒவ்வொரு முறையும் ஒரு அணி ஆஸ்திரேலியாவில் எடுப்பது கடினம். இதனைச் செய்த பிறகே ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வதுதான் நியாயம், ஆனால் நடக்கவில்லை. காரணம் பவுலர்கள் தங்கள் பணியை திறம்படச் செய்யவில்லை. இந்தத் தொடரில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றிருக்க வேண்டும்.

பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. சீராக நல்ல பந்துகளை அவர்கள் வீசவில்லை. குறிப்பாக அவர்களை இந்திய கேப்டன் செய்யச் சொன்ன காரியங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை குறைத்தது என்றுதான் கூற வேண்டும். ஷாட் பிட்ச் பவுலிங் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அது பலிக்கவில்லையெனில் உடனே நல்ல லைன் மற்றும் லெந்த்திற்கு திரும்புவது கடினம்.

கிளென் மெக்ராவைக் கேட்டுப் பாருங்கள். துல்லியமான பந்து வீச்சுக்கு பெயர் பெற்றவர் கிளென் மெக்ரா, ஆனால் அவரே நிறைய முறை கூறியிருக்கிறார், தொடர்ந்து ஷாட் பிட்ச் பந்து வீசி விட்டு நல்ல லைன் மற்றும் லெந்த்திற்கு திரும்புவது கடினம் என்று. அவரைப்போன்ற அனுபவமிக்கவருக்கே அது கடினம் என்றால் இந்தியாவின் அனுபவமற்ற பவுலர்களுக்கு இது ஏறக்குறைய அசாத்தியம்தான் என்றே நான் கருதுகிறேன்.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள் என்ற 5 பவுலர் அணிச்சேர்க்கையை செய்து பார்க்க வேண்டும். சிட்னியில் அதுதான் சிறந்த சேர்க்கையாக இருக்க முடியும்.”

இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x