

இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஐஏபிஎப்) அங்கீகாரத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
ஏற்கெனவே சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் இருந்து ஐஏபிஎப் நீக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மத்திய விளையாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சகம் கூறிய விதிமுறைகளின் படி நடக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐஏபிஎப்-பை 2012-ம் ஆண்டு டிசம்பரில் விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது.
சம்மேளனத்தின் தேர்தலை புதிதாக நடத்த வேண்டும். தேசிய விளையாட்டு விதிகளின் படி செயல்பட வேண்டுமென்று அப்போது வலியுறுத்தப்பட்டது.இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐஏபிஎப்-பை சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் நீக்கியுள்ளது உள்பட அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்த பின்னர்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.