Last Updated : 02 Jan, 2015 04:01 PM

 

Published : 02 Jan 2015 04:01 PM
Last Updated : 02 Jan 2015 04:01 PM

சிட்னி டெஸ்ட் போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு?

ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கும் சிட்னி டெஸ்ட் போட்டியில் சுரேஷ் ரெய்னா, மற்றும் இடது கை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் ஆகியோர் விளையாட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அணி இயக்குநர் ரவி சாஸ்திரி சில நாட்களுக்கு முன்புதான் அயல்நாடுகளுக்கு பொருத்தமான அணிச்சேர்க்கைதான் வெற்றிக்கு வித்திடும் என்று கூறியிருந்தார்.

அதற்கேற்ப பார்முக்குப் போராடும் வீரர்களுக்கு கதவு மூடப்படும் என்று தெரிகிறது. தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா அணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

இது தவிரவும் மேலும் சில மாற்றங்களும் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரவி சாஸ்திரி ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்றார். ஆனால் இப்போதைக்கு அக்சர் படேலை நுழைப்பதன் மூலம் ஸ்பின் - ஆல்ரவுண்டராக அவர் செயல்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

2 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின் பவுலர்கள் என்பதில் மாற்றமிருக்காது என்றே தெரிகிறது. ஏனெனில் 5 பவுலர்கள் உத்தியை இந்தியா கையிலெடுக்கும் வாய்ப்பில்லை. இதனால் உமேஷ் யாதவ் அல்லது ஷமி ஆகியோரில் ஒருவர் உட்கார வைக்கப்படலாம். அல்லது இசாந்த் சர்மாவும் உட்கார வைக்கப்படுவதற்கு விதிவிலக்கல்ல என்றே தெரிகிறது. காரணம் அவரது பந்து வீச்சில் விட்டேத்தித் தனம் அதிகமாகத் தெரிகிறது. டெய்ல் எண்டர்களை வீழ்த்த அவரைப் போன்ற அனுபவ வீரர்களே திணறுவது தற்போது அணி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷிகர் தவன் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர் நடப்பு தொடரில் 167 ரன்களை 27.83 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஷிகர் தவனை நீக்கலாம் என்ற முடிவு ஏற்பட்டால் பேட்டிங் வரிசையில் சில மாற்றுச் சாத்தியங்கள் எழுகிறது.

அதாவது, முரளி விஜய்யுடன் தொடக்க வீர்ரான கே.எல். ராகுலைக் களமிறக்கி சுரேஷ் ரெய்னாவை அணியில் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. ராகுலின் முதல் டெஸ்ட் ஆட்டத்தை வைத்து அவரது திறமைகளை எடைபோடக்கூடாது என்று தோனி குறிப்பிட்டுள்ளதால் ராகுல் அணியில் இருக்க வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.

ஆனால், தவன், ராகுல் இருவரையும் நீக்கிவிட முடிவெடுத்தால், அஜிங்கிய ரஹானேயை முரளி விஜய்யுடன் தொடக்க வீரராகக் களமிறக்கி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா இருவரையும் அணியில் எடுக்கும் வாய்ப்பும் உள்ளது. தவன், ராகுல் இருவரில் ஒருவர் அணியில் தக்கவைக்கப்பட்டால், அணியில் ரெய்னா இடம்பெறுவாரா அல்லது ரோஹித் சர்மா இடம்பெறுவாரா என்ற இரண்டக நிலை ஏற்படும்.

ரவி சாஸ்திரி ஏற்கெனவே ரெய்னாவின் திறமையை மதித்து அவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய பரிந்துரை செய்துள்ளார் என்று தெரிகிறது. இதனால் ரெய்னாவுக்கு கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ரெய்னா அயல்நாடுகளில் டெஸ்ட் மட்டத்தில் சரியாக விளையாடியதில்லை. மிட்செல் ஜான்சன், ரியான் ஹேரிஸ் இருவரும் ஷாட் பிட்ச் பந்துகளை அவருக்கு வீசினால் அவர் எதிர்கொள்வது பற்றிய சந்தேகங்கள் அணி நிர்வாகத்திற்கு இருப்பதனால் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் அவரைத் தேர்வு செய்யவில்லை என்று தெரிகிறது.

எனவே தவனின் இடம்தான் உண்மையில் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அதே போல் பந்து வீச்சில் புவனேஷ் குமார் வருவதும் உறுதியாகத் தெரியவில்லை.

இத்தகைய கேள்விகளுடன் ஜனவரி 6-ஆம் தேதி சிட்னி டெஸ்ட் தொடங்குகிறது. அன்றைய தினம் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் அறிவிக்கப்படுகிறது. அந்த அணிதான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் விளையாடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x