Published : 26 Apr 2014 12:21 PM
Last Updated : 26 Apr 2014 12:21 PM

வெற்றியையும், கிறிஸ் லின் கேட்ச்சையும் நம்பமுடியவில்லை: கவுதம் காம்பீர்

பெங்களூர் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி வியப்பாக இருக்கிறது. அதேநேரத்தில் கிறிஸ் லின் பிடித்த கேட்ச்சை நம்பமுடியவில்லை என கொல்கத்தா கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

சார்ஜாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கடைசி ஓவரில் டிவில்லியர்ஸ் சிக்ஸருக்கு தூக்கிய பந்தை மிக அபாரமாக ஜம்ப் செய்து பிடித்து பெங்களூரின் வெற்றியைப் பறித்தார் கொல்கத்தா வீரர் கிறிஸ் லின்.

யாருமே எதிர்பார்க்காத வேளையில் கேட்ச்சை பிடித்துவிட்டு அப்படியே உடலை வளைத்து எல்லைக்கோட்டில் தனது உடல்படாமல் பார்த்துக் கொண்டார். நிச்சயமாக கிறிஸ் லின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அது சிக்ஸராகியிருக்கும், போட்டியின் முடிவும் மாறியிருக்கும்

வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சி பொங்க பேசிய கௌதம் கம்பீர், “இது வியக்கத்தக்க வெற்றி. இதேபோன்று ஒரு சில வெற்றிகளை பெற்றிருப்பதால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளும்கூட. எங்களின் அணியில் கிறிஸ் லின் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். இதேபோல் சூர்யகுமார் யாதவும் கடைசிக் கட்டத்தில் சிறப்பாக ஆடினார். பந்து கொஞ்சம் பழசாகிவிட்டால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பது கடினம். அதை மனதில் வைத்துக் கொண்டு எங்களால் வெற்றி பெற முடியும் என நினைத்தோம்.

எங்களின் பேட்டிங்கும் பந்துவீச்சும் நன்றாக இல்லை. எனவே அதில் முன்னேற்றம் தேவை. கிறிஸ் லின் பிடித்த கேட்சை நம்பமுடியவில்லை. அந்த கேட்சுக்காகவே அவர் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x