

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் ஜடேஜாவுக்கு அபராதம் விதித்தது பற்றி பிசிசிஐ தனது முழு அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜடேஜாவுக்கு ஐசிசி ஆட்ட நடுவர் விதித்த அபராதம் பற்றிய விவகாரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
இந்தத் தீர்ப்பு குறித்து பிசிசிஐ முழு அதிருப்தி அடைந்துள்ளது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேல் முறையீடு செய்யும் உரிமை கொண்டுள்ளது.
ஜடேஜா மீது எந்தத் தவறும் இல்லை என்று பிசிசிஐ நம்புகிறது. இதனால் அவருக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
ஆட்ட நடுவர் டேவிட் பூன் மேற்கொண்ட விசாரணையில் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிராக ஜடேஜா நடந்து கொண்டதாக அவர் முடிவெடுத்தார்.
முன்னதாக ஆண்டர்சன் ஜடேஜாவைத் தள்ளிய விவகாரத்தை ‘சிறிய விஷயம்’ என்று வர்ணித்த இங்கிலாந்து அணி நிர்வாகம், இந்திய அணி நிர்வாகம் ஆண்டர்சன் மீது சீரியசாகப் புகார் கொடுத்தவுடன் ஜடேஜா மீது பதில் புகார் அளித்தது.
இந்த விசாரணையில்தான் ஜடேஜாவுக்கு அவரது ஆட்டத் தொகையில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.