

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மணப்பாடு சர்பிங் ரிசார்ட் அமைப்பு இணைந்து 3 நாள் கடல் சாகச விளையாட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதன் தொடக்க விழா தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் நேற்று காலை நடைபெற்றது. ஆட்சியர் ம. ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா. துரை முன்னிலை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் ஹர்சகாய் மீனா, போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மணப்பாடு கடற்கரையில் இந்தியாவிலேயே முதல் முறையாக 5 வகையான கடல் சாகச விளையாட்டுகள் ஒரே இடத்தில் நடைபெறுகின்றன. பாய்மரப்படகு ஓட்டம், அலைச்சறுக்கு ஓட்டம், காற்றாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம், குறும்படகு ஓட்டம், நின்றபடி துழாவல் ஓட்டம் ஆகிய விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், ஒடிஸா போன்ற 18 மாநிலங்களை சேர்ந்த 15 பெண்கள் உள்ளிட்ட 147 பேர் பங்கேற்றுள்ளனர்.
முதல் விளையாட்டாக குறும்படகு ஓட்டம் நடைபெற்றது. இதில் வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சென்னையை சேர்ந்த இரு சிறுமிகள் உள்ளிட்ட சில பெண்களும் ஆர்வமுடன் அலைகளுக்கு நடுவே குறும்படகுகளை இலக்கை நோக்கி செலுத்தினர். தொடர்ந்து காற்றாடியுடன் இணைந்த அலைச்சறுக்கு போட்டி உள்ளிட்ட மற்ற போட்டிகளும் நடைபெற்றன. முதல் நாளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன. இன்றும், நாளையும் முறையான போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிகள் அனைத்தும் சர்வதேச விதிகளின்படி நடைபெறுகிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடுவர்கள் போட்டிகளை நடத்துகின்றனர். இந்தியாவில் உள்ள 5 முக்கிய கடல் சாகச விளையாட்டு கூட்டமைப்பு அங்கீகாரத்துடன் போட்டி நடைபெறுவதால் இதில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு தர வரிசை கிடைக்கும்’ என, போட்டி அமைப்பாளரான மணப்பாடு சர்பிங் ரிசார்ட் இயக்குநர்அருண் மிராண்டா தெரிவித்தார்.