Published : 08 Jan 2015 08:29 am

Updated : 08 Jan 2015 08:30 am

 

Published : 08 Jan 2015 08:29 AM
Last Updated : 08 Jan 2015 08:30 AM

ராஜபக்ச வெல்வாரா, வீழ்வாரா?

இலங்கையின் ஏழாவது அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் முழுவதும் இந்தத் தேர்தலை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

தேர்தல் களத்தில் மொத்தம் 19 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது.

ஜெயிக்கப் போவது யார்?

கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போர் ராஜபக்ச ஆட்சியில் முடிவுக்கு வந்ததால் அந்த நாட்டின் முடிசூடா மன்னனாக அவர் கொண்டாடப்பட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 1970-ல் முதன்முதலாக காலடி எடுத்து வைத்த ராஜபக்ச அரசியல் ஏணியில் சறுக்காமல் முன்னேறினார். 1994-ல் அமைச்சரானார். 2004-ல் பிரதமர் ஆனார். 2005-ல் முதல்முறையாக அதிபராகப் பதவியேற்றார்.

அவரது ஆட்சியில் 2009-ம் ஆண்டில் உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2010-ல் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

அந்த நாட்டின் அரசியல் சாசன விதிகளின்படி இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். அச் சட்டத்தில் திருத்தம் செய்து 3-வது முறையாக அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

சவால் விடுக்கும் சிறிசேனா

சில மாதங்களுக்கு முன்பு வரைகூட ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட எதிரணியில் வலுவான வேட்பாளர் இல்லை என்றே கூறப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் திடீரென காட்சிகள் மாறின.

ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான மைத்ரிபால சிறிசேனா யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் சுமார் 35 கட்சிகள் இணைந்து மைத்ரிபால சிறிசேனாவை களத்தில் இறக்கியுள்ளன.

30 எம்.பி.க்கள் கட்சித் தாவல்

சிறிசேனாவை தொடர்ந்து ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பலர் அடுத்தடுத்து எதிரணிக்கு தாவி ராஜபக்சவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். அதன்படி இதுவரை சுமார் 450 நகர, மாகாண, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு மாறியுள்ளனர்.

இதில் ஆளும் கூட்டணியின் முக்கிய தலைவர்களான அத்துலாலியே ரத்ன தேரர், பாட்டாளி சம்பிக்க ரணவக்க, ஹிருணிகா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேலும் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் வருகை, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவு ஆகியவை எதிரணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளன.

இலங்கை வாக்காளர்கள் சதவீதம்

இலங்கையின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 490. இதில் சிங்கள பவுத்தர்கள் 70.19 % பேர் உள்ளனர். இலங்கைத் தமிழர்கள் 11.21 % பேரும் முஸ்லிம்கள் 9.11 % பேரும், சிங்கள கிறிஸ்தவர்கள் 4.69 % பேரும் இந்திய தமிழர்கள் 4.16 % பேரும். இதர பிரிவினர் 0.04 % பேரும் உள்ளனர்.

பெரும்பான்மை சிங்கள பவுத்தர்களின் வாக்குகள்தான் இலங்கை அதிபர் யார் என்பதை தீர்மானிக்கின்றன. தற்போது அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டிருப்பதால் சிங்கள பவுத்தர்களின் வாக்குகள் இரண்டாகப் பிரிந்துள்ளன.

கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, நுவரெலியா, பதுல்ல, யாழ்ப்பாணம், வன்னி, பொலநறுவ உள்ளிட்ட மாவட்டங்களில் மைத்ரிபால சிறிசேனாவுக்கு செல்வாக்கு அதிகம்.

அதேநேரம் அதிபர் ராஜபக்சவுக்கு காலி, மாத்தளை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், மொனராகலை, கேகாலை, ரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வாக்குகள் கைகொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச எதிர்ப்பு அலை இருப்பினும் இலங்கை முழுவதும் தற்போது ராஜபக்சவுக்கு எதிரான அலையே வீசுவதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஊழல் விவகாரங்கள், இன- மத கலவரங்கள், பள்ளிவாசல்கள், இந்து கோயில்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதல் ஆகியவை ராஜபக்சவுக்கு பாதகமாக அமைந்துள்ளன.

அதன்படி இலங்கைத் தமிழர்களின் 90% வாக்குகள், முஸ்லிம்களின் 96 % வாக்குகள், இந்திய தமிழர்களின் 70 % வாக்குகள், கிறிஸ்தவர்களின் 60 % வாக்குகள் மைத்ரிபால சிறிசேனாவுக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் ராஜபக்சவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போதைய நிலையில் ராஜபக்ச மூன்றாவது முறையாக வெல்வாரா, வீழ்வாரா என பட்டிதொட்டியெல்லாம் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு நாளை காலை விடை கிடைத்துவிடும்.

இலங்கை அதிபர் தேர்தல்ராஜபக்சசிறிசேனா

You May Like

More From This Category

More From this Author