Published : 13 Jan 2015 03:11 PM
Last Updated : 13 Jan 2015 03:11 PM

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிஃபா தங்கப்பந்து விருது: கெஸ்லருக்கு சிறந்த வீராங்கனை விருது

ஜெர்மனியின் பிஃபா அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘பாலோன் தி ஓர்’ எனப்படும் தங்க பந்து விருதை மூன்றாவது முறையாக போர்ச்சுக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். சிறந்த வீராங் கனைக்கான விருது ஜெர்மனியைச் சேர்ந்த நாடின் கெஸ்லருக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச கால்பந்துக் கழகமான பிஃபா, ஓராண்டில் சிறப்பாகச் செயல்படும் வீரருக்கு தங்க பந்து விருதை வழங்கி கவுரவிக்கிறது.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிரெஞ்ச் கால்பந்தின் பாலோன் தி ஓர் மற்றும் பிஃபா உலகின் சிறந்த வீரர் விருது ஆகிய இரண்டு விருதுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே விருதாக வழங்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்புக்குப் பிறகு முதலில் இவ்விருதை அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணியின் லயோனல் மெஸ்ஸி வென்றார். மெஸ்ஸி தொடர்ந்து நான்கு முறை இவ்விருதை வென்றுள்ளார்.

பெண்களுக்கு மட்டும் பிஃபா சிறந்த வீராங்கனை விருது தனியாக வழங்கப்படுகிறது.

2014-ம் ஆண்டுக்கான தங்க பந்து விருதை, கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். தங்க பந்து விருதை மூன்றாவது முறையாகப் பெறுகிறார் ரொனால்டோ. தனது சிறந்த போட்டி யாளரான மெஸ்ஸியை வீழ்த்தி ரொனால்டோ இவ்விருதை வென்றுள்ளார். ஸ்விட்சர்லாந் திலுள்ள ஜூரிச் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் இவ்விருதை பிஃபா தலைவர் செப் பிளாட்டர் வழங்கினார். கடந்த 2008-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக விளையாடிய போதும், 2013-ம் ஆண்டில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போதும் இவ்விருதுகளை ரொனால்டோ வென்றுள்ளார்.

இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “மூன்று முறை இவ்விருதை வெல்வென் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அனைத்துக் காலங்களிலும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இதற்காக பெருமுயற்சி தேவைப்படும்” எனத் தெரிவித்தார்.

ரொனால்டோ தலைமையிலான ரியல்மாட்ரிட் அணி, கடந்த ஆண்டு 10-வது ஐரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மகுடம் சூடியது. இத்தொடரில் 15 கோல்கள் அடித்த மெஸ்ஸியின் சாதனையை, வெறும் 11 போட்டிகளில் பங்கேற்று 17 கோல்கள் அடித்ததன் மூலம் முறியடித்தார் ரொனால்டோ.

மெஸ்ஸிக்கு 2-வது இடம்

இவ்விருது வாக்கெடுப்பு மூலமே வழங்கப்படுகிறது. 181 தேசிய அணிகளின் பயிற்சியாளர்கள், 182 நாட்டு அணிகளின் கேப்டன்கள், 181 செய்தியாளர்கள் வாக்களித்தனர்.

இதில், 37.66 சதவீத வாக்கு களைப் பெற்று ரொனால்டோ வெற்றி பெற்றார். அர்ஜென்டி னாவின் மெஸ்ஸிக்கு 15.76 சதவீத வாக்குகளும், ஜெர்மனி கோல்கீப்பர் மானுவேல் நூயருக்கு 15.72 சதவீத வாக்குகளுடன் 3-வது இடமும் கிடைத்தன.

ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லோ-வுக்கு சிறந்த பயிற்சியாளர் விருதும், கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸுக்கு சிறந்த கோலுக்கான விருதும் வழங்கப்பட்டன.

பார்சிலோனாவிலிருந்து விலகுகிறார் மெஸ்ஸி

பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி அந்த அணியிலிருந்து விலகுவதை உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, “பார்சிலோனோ அணியி லிருந்து விலகுகிறேன். அடுத்த ஆண்டு எங்கிருப்பேன் எனத் தெரியாது. கிறிஸ்டியானோ ரொனால்டோ சொன்னது போன்று கால்பந்து விளையாட்டு ஏராளமான திருப்பங்களைக் கொண்டது. எதுவேண்டுமானாலும் நேரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x