

ஒருநாள் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை எடுத்து சாதனையை வைத்திருந்த விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரை ஹஷிம் ஆம்லா முறியடித்தார்.
கிங்ஸ்மீட் டர்பனில் நேற்று நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆம்லா 66 ரன்கள் எடுத்தார்.
இந்த இன்னிங்ஸ் அவரது 101-வது இன்னிங்ஸ், இதில் அவர் 5,000 ரன்களைக் கடந்து அதிவேக 5,000 ரன்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இது மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளில் 2000, 3000, 4000 ரன்களையும் குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்த சாதனையும் ஆம்லாவுக்குரியதே.
நேற்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா மழைகாரணமாக 48.2 ஓவர்களுடன் முடித்து கொள்ளப்பட்ட இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்களை எடுத்தனர்.
ஆம்லா 66 ரன்களையும், கேப்டன் டீவிலியர்ஸ் 81 ரன்களையும், டேவிட் மில்லர் 70 ரன்களையும் எடுத்தனர். அதற்கு அடுத்தபடியாக எக்ஸ்ட்ராக்கள் 26 ரன்கள். இதில் வைடுகள் 11. தொடக்கத்தில் களமிறங்கிய ரூசோ ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க, ஃபாப் டூபிளேசிஸ் அரிதாக டக் அவுட் ஆனார்.
கன மழை காரணமாக தாமதமான மே.இ.தீவுகள் துரத்தல் இலக்கு டக்வொர்த் முறையில் 32 ஓவர்களுக்கு 226 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், கெய்ல் மட்டுமே தாறுமாறாக அடித்து ஆடி, 24 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 41 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். டிவைன் ஸ்மித் 29 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 34 பந்துகளில் 51 ரன்களைச் சேர்த்தனர்.
கெய்ல், டேல் ஸ்டெய்னிடம் ஆட்டமிழந்தார். 51/1 என்ற நிலையிலிருந்து தென் ஆப்பிரிக்க பவுலர்களின் அபார பந்துவீச்சு காரணமாக அடுத்த 113 ரன்களில் மீதமுள்ள 9 விக்கெட்டுகளையும் மே.இ.தீவுகள் பறிகொடுத்து 164 ரன்களுக்குச் சுருண்டது. 28.2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் கதை முடிந்தது. பிலாண்டர், ஸ்டெய்ன், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக ஏ.பி.டிவிலியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நாளை ஜொகான்னஸ்பர்கில் நடைபெறுகிறது.