

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு முன்பான ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியை இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் கேப்டன், ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு மைக் ஹஸ்ஸி இல்லாததால் கிறிஸ் ராஜர்ஸ் கேப்டனாக செயல்பட்டார்.
கான்பராவில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து இயன் பெல்லின் அதிரடி 187 ரன்கள் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணி அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் 89 பந்துகளில் 136 ரன்களை விளாசியும் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. அதாவது 48.1 ஓவர்களில் 331 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தப் போட்டிக்கு லிஸ்ட் ஏ தகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் இயன் பெல், மொயீன் அலி களமிறங்கி 113 ரன்களை தொடக்க விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இதில் மொயின் அலி கடும் ஆக்ரோஷம் காண்பித்து 49 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 71ரன்களை எடுத்து கிளென் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
3-ஆம் நிலையில் களமிறங்கிய ஜேம்ஸ் டெய்லர் 77 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 71 ரன்களைச் சேர்த்து பெஹெண்ட்ராப் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்கோர் 38.3 ஓவர்களில் 254 ரன்களாக இருந்தது.
ஆனால் இயன் பெல் 102 பந்துகளில் சதம் எடுத்தவர் திடீர் ஆக்ரோஷம் பொங்க அடுத்த 43 பந்துகளில் 87 ரன்களை விளாசினார். இதில் 20 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும். கடைசி பந்துக்கு முதல் பந்தில் பெல் 187 ரன்களுக்கு அவுட் ஆனார். ரூட் 13 ரன்களையும், ஜோஸ் பட்லர் 25 ரன்களையும் எடுத்தனர். கடைசி 11.3 ஓவர்களில் 137 ரன்கள் அடித்து நொறுக்கப்பட இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்தது. பெஹெண்ட்ராப் 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கிளென் மேக்ஸ்வெல் தாண்டவம்:
ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணி இலக்கைத் துரத்தும் போது 10 ஓவர்களுக்குள் தொடக்க வீரர்களான பேங்க்ராப்ட் (15), கிறிஸ் ராஜர்ஸ் (20) ஆகியோர் விக்கெட்டுகளை முறையே ஜோர்டான் மற்றும் கிறிஸ் வோக்ஸிடம் இழந்தது.
3ஆம் நிலையில் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் தனிமனிதனாக தன் அணியை வெற்றிபெறும் நிலைக்குக் கொண்டு சென்றார். 20 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசிய கிளென் மேக்ஸ்வெல் 89 பந்துகளில் 136 ரன்களை விளாசினார். 9.4 ஓவர்களில் 50/2 என்று இருந்த அணியை தனது தனிப்பட்ட அதிரடி திறமைகளினால் 29 ஓவர்களில் 216 ரன்களுக்குக் கொண்டு சென்றார். ஆனால் பிராட் வீசிய வெளியே சென்ற பந்தை பாயிண்டில் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.
மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த பிறகு அவரது அதிரடியை வேறு யாரும் தொடர முடியவில்லை. அவரது அதிரடி சதத்தைத் தவிர மற்ற வீரர்கள் 40 ரன்களைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 48.1 ஓவர்களில் 331 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் இந்த அதிரடி திருவிழாவிலும் 8.1 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோர்டான், டிரெட்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
நாளை மறுநாள், வெள்ளிக்கிழமை முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை மணி 8.50-க்கு தொடங்கும்.