

1987 உலகக் கோப்பைப் போட்டித் தொடர், கிரிக்கெட்டின் அதிகார மையம் இடம் மாறிய தருணமாக அமைந்தது.
1987 கிரிக்கெட் உலகக் கோப்பை. பல்வேறு ‘முதல்’ நிகழ்வுகளுக்காகவும், சில ‘கடைசி’ நிகழ்வுகளுக்காகவும், உலகக் கோப்பை வரலாற்றிலும் கிரிக்கெட் வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்று விட்டது. உலக கிரிக்கெட் நிர்வாக அதிகார மையத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதை உணர்த்துவதாக அமைந்த போட்டி இது.
அதுவரை, கிரிக்கெட்டின் ஏகபோக அதிகார மையங்களாக இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இருந்துவந்த நிலைமாறி, மற்ற நாடுகளும் கிரிக்கெட் ஆட்டத்தின் நிர்வாக விஷயங்களைக் கையாளலாம் என்ற பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னணி சுவாரசியமானது.
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
1975, 1979, 1983 உலகக் கோப்பைப் போட்டிகள், கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்திலேயே நடந்தன. இதை இப்படியே விடக் கூடாது என்ற எண்ணத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகள் முடிவெடுத்ததன் விளைவாகவே, உலகக் கோப்பை போட்டிகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி, முதல் முறையாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது.
இதற்கான அஸ்திவாரத்தை 1983 உலகக் கோப்பை முடிந்ததுமே, இந்தியாவைச் சேர்ந்த, பின்னாளில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் கோலோச்சிய ஐ.எஸ்.பிந்த்ரா, ஜக்மோகன் டால்மியா, என்.கே.பி.சால்வே ஆகிய மூவரும் போட்டுவிட்டார்கள்.
அவர்கள் மூவரும், 1983 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏர் மார்ஷல் நூர் கான், துணைத் தலைவர் ஆரிஃப் அப்பாஸி ஆகியோ ரைச் சந்தித்து ஆசியாவில் உலகக் கோப்பையை நடத்தும் தங்களது திட்டத்தினை விவரித்தனர். பாகிஸ்தான் தரப்பும் உற்சாகமாகப் பச்சைக் கொடி காட்டியது.
கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமின்றி, நிதிநிலையிலும் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்த இலங்கை யும் ஒத்துழைக்க முன்வந்தது. தங்களால் நிதி விவகாரத்தில் எந்த பங்களிப்பையும் தர இயலாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் காமினி திஸ்ஸநாயகே தெளிவாகக் கூறிவிட்டார்.
ஆசிய நாடுகளின் சாதுரியம்
உலகக் கோப்பை போட்டிகளை ஆசியாவில் நடத்துவதற்காக எப்படிக் காய்களை நகர்த்துவது, என்று மூன்று நாடுகளின் கிரிக்கெட் நிர்வாகிகளும் லாகூரில் கூடி விவாதித்தனர். அதில், நிதி தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கு துபையில் பல கிரிக்கெட் போட்டிகளை நடத்திய அப்துல் ரெஹ்மான் புகாதிரின் ஆலோசனையை நாட முடிவெடுக்கப்பட்டது.
லாகூர் கூட்டத்துக்குப் பிறகு, ஆசியா வில் உலகக் கோப்பையை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கோரும் ஒரு வரைவறிக்கை தயாரிக்கப்பட்டது. அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) சமர்ப்பித்தபோது, எதிர்பார்த்தபடியே, இங்கிலாந்திடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்நாளில் ஐசிசியில் இங்கிலாந்தின் பிடி அதிகமாக இருந்ததால் அந்தக் கோரிக்கை உடனடியாக நிராகரிக்கப்பட்டது.
இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள் சாதுரியமாக வேறு வழியைக் கையாண்டு, சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்தின. ஆஸ்திரேலியாவை அணுகிய அவர்கள், இந்திய துணைக் கண்டத்தில் 1987 உலகக் கோப்பையை நடத்த ஆதரவளித்தால், அதன் பிறகு அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளை, சுழற்சி முறையில், ஐ.சி.சி. டெஸ்ட் போட்டி உறுப்பு நாடுகளில் நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆலோசனை மிகவும் பிடித்திருந்தபோதிலும், இங்கிலாந்தை எதிர்த்து வெளிப்படையாக அந்நாட்டால் வாக்களிக்க முடியாது. எனவே மறைமுகமாக ஆதரவு தருவதாக உறுதியளித்தது. ஆசிய நாடுகள் உறுதியளித்தபடி 1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தன.
50 ஓவர் போட்டியாக நடத்திக்கொள்ளலாம்
இங்கிலாந்து தரப்போ, ஆசிய நாடுகளில் பகல் பொழுது நீண்ட நேரம் இருக்காது, அதனால் 60 ஓவர் (1983 கோப்பை வரை இரு அணிகளும் தலா 60 ஓவர்கள் விளையாட வேண்டும்) கிரிக்கெட் போட்டியை முழுவதுமாக நடத்தி முடிக்க அங்கு போதிய வெளிச்சம் இருக்காது என்று சப்பைக்கட்டு கட்டியது. அதற்கு ஆசியத் தரப்பினரோ, “அறுபது ஓவர்கள் விளையாட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அதனால் 50 ஓவர் போட்டிகளாக நடத்திக்கொள்ளலாம்” என்று வாதிட்டனர்.
வாக்கெடுப்பில் ஆசியத் தரப்பு வென்றது. தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தால் உலகக் கோப்பை வருவாயில் கணிசமான தொகையைக் கொடுப்பதாக உறுப்பு நாடுகளுக்கு ஆசியத் தரப்பு உறுதியளித்தது. அந்த ஆலோசனை நல்ல பயனை அளித்தது.
டெஸ்ட் போட்டிகளை விளையாடும் 8 நாடுகள் (ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 2 வாக்குகள்), மற்றும் இதர 21 சிறிய உறுப்பு நாடுகளிடமிருந்து (தலா ஒரு வாக்கு) கிடைத்த பெரும்பான்மையான ஆதரவுடன் ஆசியத் தரப்பு வென்றது. பிறகென்ன? இங்கிலாந்தில் மட்டுமே நடந்துவந்த உலக் கோப்பை கிரிக்கெட் போட்டி, முதல் முறையாக, கண்டம் தாண்டி, இந்தியாவுக்கு வந்தது.
அரசியலான கிரிக்கெட்
அதன் பிறகு, பிரச்சினை அரசியல் களத்துக்கு இடம்பெயர்ந்தது. இந்திய - பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான பதற்றங்கள் நிலவியதால் இரு நாடுகளும் இணைந்து இந்தப் போட்டியை நடத்த முடியுமா என்னும் சந்தேகம் ஏற்பட்டது.
அவ்வப்போது நடந்த ராணுவ அத்துமீறல்களால் ஏற்பட்ட சச்சரவுகளுக்கிடையே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக் ஆகியோரை கிரிக்கெட் நிர்வாகிகள் சம்மதிக்க வைத்தது தனிக்கதை. இரு நாடுகளுக்கிடையிலான பதற்றங்களைக் காரணம் காட்டி இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் போட்டியை ஆசியாவில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தன.
பின்னர், ஒரு போட்டியில் ராஜீவையும், ஜியாவையும் அருகருகே அமரவைத்து, ‘ஒற்றுமையை’ ஆசியத் தரப்பு வெளிப்படுத்தியது. பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள், ஓரணியில் திரண்டு போராடிய கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியென்பதால், அந்நாடுகளுக்கு இது சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
புதிய ஏற்பாடுகள்
முதல் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே நடந்த அந்த உலகக் கோப்பைப் போட்டியில், ஒரு அணி ஆடக்கூடிய மொத்த ஓவர்களின் எண்ணிக்கை 50ஆகக் குறைக்கப்பட்டது. முதன்முதலாக இருநாடுகள் இணைந்து நடத்திய உலகக் கோப்பையாகவும் அது அமைந்தது.
பொதுவான நடுவரை நியமிக்கும் வழக்கமும் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டது, அதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றி லேயே மிகவும் அதிகம் பேர் நேரிலும், தொலைக்காட்சியில் நேரடியாகவும் பார்த்து ரசித்த போட்டியாகவும் அது அமைந்தது. வெள்ளைச் சீருடை அணிந்து வீரர்கள் விளையாடிய கடைசி உலகக் கோப்பையாகவும் அமைந்தது.
இப்படியாகப் பல்வேறு மாற்றங் களைக் கொண்ட 1987 உலகக் கோப்பை, உலகக் கிரிக்கெட் நிர்வாகத்தில் இங்கிலாந்து என்ற மேற்கத்திய கிரிக்கெட் அதிகார மையத்தினை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய கீழை நாடுகள் சேர்ந்து சாய்த்த நிகழ்வாக அமைந்தது. ஐசிசி நிர்வாகத்தில் பின்னாளில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுக்கவும் அடிகோலியது.
(1987 ஆட்டங்களும் ஆச்சரியங்களும்: நாளை...)