

சிட்னி டெஸ்ட் போட்டியில் இன்று நிதானமாக விளையாடி 50 ரன்கள் எடுத்த அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை எட்டினார்.
இதன் மூலம் 100 விக்கெட்டுகள், 1,000 ரன்கள் என்ற 'இரட்டை' -யை சாதித்த 9-வது இந்திய வீரரானார் அஸ்வின். அவரது பேட்டிங் சராசரி 37.3 என்பது 9 வீரர்களில் அதிக சராசரியாகும்.
24 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த இரட்டையை சாதித்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது அதிவேக இரட்டையாகும் (100 விக். 1,000 ரன்கள்). இதனை 21 டெஸ்ட் போட்டிகளில் சாதித்தவர் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயன் போத்தம், 23 டெஸ்ட் போட்டிகளில் சாதித்தவர் இந்திய ஆல்ரவுண்டர் வினு மன்கட்.
இன்று வார்னரை அஸ்வின் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை 6-வது முறையாக வீழ்த்தியுள்ளார் அஸ்வின். அஸ்வினுக்கு எதிராக 10 இன்னிங்ஸ்களில் 115 ரன்களையே அவர் எடுத்துள்ளார். இதனால்தான் கோலி இன்று தொடக்க ஓவர்களிலேயே அஸ்வினை பயன்படுத்தினார் போலும்.
மற்றொரு ஆஸி. தொடக்க வீரர் எட் கோவன் என்பவரை அஸ்வின் 7 முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று ஆஸ்திரேலிய 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியதன் மூலம், 23 ஆண்டுகளில் 4 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றும் 2-வது ஸ்பின்னர் ஆனார் அஸ்வின். இதற்கு முன்னால் அனில் கும்ளே தான் 7 முறை 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவில் கைப்பற்றியுள்ளார். அதாவது 2003-04 மற்றும் 2007-08 தொடர்களில் கும்ளே இதனை நிகழ்த்தினார்.
3 ஓவர்களில் 45 ரன்களை வாரிவழங்கிய உமேஷ் யாதவ் ஒரு விசித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது ஒரு இன்னிங்சில் 3 அல்லது அதற்கும் மேல் ஓவர்களை வீசிய பவுலர்கள் எவரும் ஓவருக்கு 15 ரன்களை விட்டுக் கொடுத்ததில்லை.
4 போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 769 ரன்களை அடித்ததன் மூலம் 3-வது அதிகபட்ச ரன்களை எடுத்த வீர்ரானார். சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவரது அறிமுக தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்களை எடுத்தார். விவ் ரிச்சர்ட்ஸ் 1976ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 829 ரன்களைக் குவித்தார்.