தகுதியின் அடிப்படையிலேயே அணித்தேர்வு: மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம்

தகுதியின் அடிப்படையிலேயே அணித்தேர்வு: மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம்
Updated on
1 min read

உலகக்கோப்பை அணியில் ஆல்ரவுண்டர்கள் பொலார்ட், டிவைன் பிராவோ ஆகியோர் தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படவில்லை என்று மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவ் கேமரூன் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகசாதனை துரத்தலுக்குப் பிறகு நேற்று உலகக்கோப்பைக்கான மேற்கிந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிரடி ஆல்ரவுண்டர்களான கெய்ரன் பொலார்ட் மற்றும் டிவைன் பிராவோ இடம்பெறவில்லை. இதன் மூலம் பொலார்டின் அபாரமான ஃபீல்டிங் திறமைகளை இந்த உலகக் கோப்பை இழந்துள்ளது. டிவைன் பிராவோவின் ஆல் ரவுண்ட் திறமைகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் இழக்கின்றனர்.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான அணி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்று வாரியத்தலைவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை ஊதிய பிரச்சினை காரணமாக பாதியிலேயே கைவிட்டதற்கு டிவைன் பிராவோ, பொலார்ட் காரணம் என்று அவர்களை தண்டிக்கும் விதமாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று கிறிஸ் கெய்ல் மற்றும் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

"இதன் மூலம் நாங்கள் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். கிரிக்கெட் அல்லாத காரணங்கள் கூறப்படுகிறது. இது குறித்து நாங்கள் பணிக்குழுவின் அறிக்கையின் படி நடந்து கொண்டோம். நேற்று வாரியக்கூட்டம் நடந்தது, அதில் பணிக்குழுவின் அறிக்கையைப் பரிசீலனை செய்து, அறிக்கையின் பரிந்துரைகளை அமல் செய்ய முடிவெடுத்தோம்” என்றார்.

இந்திய பயணம் பாதியிலேயே முடிந்ததற்குக் காரணம் என்னவென்று ஆராய இந்தக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரனெடா பிரதமர் ரால்ஃப் கொன்சால்வேஸ் வீரர்கள், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான பிரச்சினைகளில் தலையிட்டு ஒப்பந்தம் செய்ய உதவி புரிந்தார்.

இந்நிலையில், அவர் வாரியத் தலைவர் டேவ் கேமரூனுக்கு எழுதிய 2 பக்க கடிதத்தில், பிராவோ, பொலார்ட் நீக்கம் ஒரு பழிவாங்கும் செயலே என்றும், பாகுபாடும், பலிகடா ஆக்கப்படும் மனநிலைக்கான செயல் என்றும், கிரிக்கெட் ஆட்ட தகுதியின் அடிப்படையில் அணித் தேர்வு அமையவில்லை என்றும் சாடியிருந்தார்.

ஆனாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அணியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும், ஒருநாள் தரவரிசையில் மே.இ.தீவுகள் 8ஆம் இடத்தில் உள்ளது, இதனை சரிசெய்யவே அணித் தேர்வு என்றும் டேவ் கேமரூன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிராவோ, பொலார்ட் இடையே 255 ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அனுபவம் இருக்கிறது. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அவர்கள் நன்றாகவே பங்களிப்பு செய்துள்ளனர் என்று கூற முடியும். ஆனாலும் பழிவாங்கும் செயலுக்கு மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் ‘தகுதி’ என்பதைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அரங்கில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in