பத்ம பூஷண்: சாய்னா வழியில் விஜேந்தர் கோரிக்கை

பத்ம  பூஷண்: சாய்னா வழியில் விஜேந்தர் கோரிக்கை
Updated on
1 min read

ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் தன் பெயரை பத்ம பூஷண் விருதுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று இந்திய குத்துச் சண்டை சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் விஜேந்தர் சிங். 2010-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை மத்திய அரசு கவுரவித்தது.

இந்த நிலையில், ''பத்ம பூஷண் விருதுக்கு நான் தகுதியானவன். இந்திய குத்துச் சண்டை சங்கம் எனது பெயரை பரிந்துரைக்க வேண்டும்'' என்று விஜேந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பத்ம பூஷண் விருதுக்கு தன் பெயரை பரிந்துரைக்கவில்லை என்று தன் அதிருப்தியை ட்விட்டர் மூலம் பகிரங்கமாக தெரிவித்தார் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.

அந்த அதிருப்தியின் எதிரொலியாக, விளையாட்டுத் துறை அமைச்சகம் சாய்னா நேவால் பெயரை பத்ம பூஷண் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இணைத்தது.

இந்தச் சூழலில், சாய்னா வழியைப் பின்பற்றி, விஜேந்தர் பத்ம பூஷண் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

சாய்னாவும் 2010-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். 5 ஆண்டுகள் இடைவெளியில் பத்ம பூஷண் விருதுக்காக சாய்னாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in