Last Updated : 17 Nov, 2013 01:01 PM

 

Published : 17 Nov 2013 01:01 PM
Last Updated : 17 Nov 2013 01:01 PM

சச்சின் - நெகிழ்ச்சி ததும்பும் நினைவுகள்

‘‘உலகில் வேறு யாருக்கும் இதுபோன்ற பிரிவு உபசார விழா நடந்ததாகத் தெரியவில்லை’’ என்றார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி.

முதுகெலும்பற்ற மட்டை வீச்சின் மூலம் இந்த டெஸ்ட் தொடரைப் பாதியாகக் குறைத்துவிட்ட மேற்கிந்திய அணியினர் தங்கள் வாழ்நாளில் காணவியலாத காட்சியை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரது உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்தது சமியின் வார்த்தை.

கண்ணீரின் தருணம்

சத்தியமான வார்த்தை அது. ஸ்டீவ் வா, பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங் என யாருக்கும் கிடைத்திராத பேறு இது. இந்தியாவின் தவப்புதல்வன் என்று சொல்லத் தகுந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், தான் மிகவும் நேசித்த கிரிக்கெட் மைதானத்தை விட்டு விடைபெறும் காட்சியைப் பார்த்தபோது கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதே ஒரு கணம் மறந்துபோனது. கண்களைத் துடைத்துக்கொள்ளாத கரங்களைப் பார்ப்பது அரிதாக இருந்த அபூர்வமான தருணம் அது. மும்பை வான்கடே அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இரு அணியின் ஆட்டக்காரர்களும் முன்னாள் ஆட்டக்காரர்களும் வர்ணனையாளர்களும் டெண்டுல்கரின் குடும்பத்தினரும் இதர உறவினர்களும் நண்பர்களும் ஆட்டத்தின் நிர்வாகிகளும் நெகிழ்ந்து நின்ற நேரம் அது. மகத்தான சாதனைகளைப் புரிந்த சுவடுகூடத் தெரியாத அடக்கத்துடன் தன் அசாத்தியமான பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் சச்சின் ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்தபோது அரங்கமே அழுதது.

ஆகச்சிறந்த பார்ட்னர்ஷிப்

பதினோரு வயதில் தனக்குச் சுதந்திரம் அளித்த தன் தந்தையை நினைவுகூர்ந்த சச்சின், “நான் ஒவ்வொரு முறை ஏதேனும் ஒரு மைல்கல்லைத் தொடும்போதும் மட்டையை உயர்த்துவேன். அது என் தந்தைக்காக” என்றார். தன் தாய்க்கு மட்டுமின்றித் தன் ஆசிரியர்களுக்கும் நன்றி சொன்ன சச்சினின் பண்பு அனைவரது மனங்களையும் தொட்டது. சச்சின் தன் மனைவியைப் பற்றிப் பேசும்போது “அஞ்சலியின் ஒத்துழைப்பும் ஊக்கமும் இல்லாமல் என்னால் இந்த அளவுக்கு சாதித்திருக்க முடியாது” என்றார். ‘‘என் வாழ்வின் ஆகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அஞ்சலியுடனான பார்ட்னர்ஷிப்’’ என்று அவர் நெகிழ்ந்தபோது அஞ்சலியின் கண்கள் குளமாயின. தன் வாழ்வின் மதிப்பு வாய்ந்த வைரங்களாகத் தான் கருதும் தன் குழந்தைகளுடன் போதிய அளவு தன்னால் நேரம் செலவிட முடியவில்லை என்று சொல்லி அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார். திராவிட், கங்குலி, கும்ப்ளே போன்ற சகாக்களுக்கும் நன்றி கூறினார். சிறந்த ஆட்டக்காரராக மட்டுமின்றி சிறந்த மகனாக, கணவனாக, மாணவனாக, தந்தையாக, சகாவாக சச்சின் விளங்குவதையும் அவர் பேச்சு காட்டியது. “நீ திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது, நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும்” என்று தன் தந்தை சொன்னபடி வாழ்ந்துவரும் சச்சினின் பண்பை உணர்த்திய பேச்சு அது.

தாங்க முடியாத பிரிவு

ரசிகர்களைப் பற்றிப் பேசும்போதும் அளப்பரிய அவர்களது அன்பு அவரை ஒவ்வொரு கணமும் நெகிழவைப்பதை உணர முடிந்தது. “நான் பூஜ்யம் அடித்தாலும் சதம் அடித்தாலும் என் மீது ஒரே விதமான அன்பு செலுத்தும் உங்களுக்கு நன்றி” என்று சொன்ன அவர் சச்சின், சச்சின் என்று ரசிகர்கள் போடும் கோஷம் இறுதி மூச்சுவரை தன் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றபோது பல ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வழிவதைக் காண முடிந்தது. பத்திரிகையாளர்கள் பிரிவில் அமர்ந்திருந்தவர்களும் நெகிழ்ச்சியின் பிடியில் இருந்தார்கள். உணவின்போது அனைவரது பேச்சும் “இனி இப்படி ஒரு ஆட்டக்காரரை எப்படிப் பார்க்க முடியும்” என்பதைப் பற்றியதாகவே இருந்தது. மைதானத்தை விட்டு சச்சின் பிரிவதை ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட இழப்பாகவே கருதியதை உணர முடிந்தது.

நன்றி செலுத்துதல்

உணர்ச்சிகரமான பேச்சை முடிக்க முடியாமல் முடித்துக்கொண்டு பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் நினைவுப் பரிசுகளை வாங்கிக்கொண்டு மைதானத்தைச் சுற்றிவந்த சச்சின், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். சிறிது தூரம் அவர் நடப்பதற்குள் அவருக்கு இரு புறமும் வந்து நின்ற விராட் கோலியும் மகேந்திர சிங் தோனியும் அவரைத் தோளில் தூக்கிவைத்துக்கொண்டார்கள். கையில் தேசியக் கொடியுடனும் கண்ணீரை மறைக்கும் சிரிப்புடனும் இந்திய கிரிக்கெட்டின் ஓய்வு பெறும் நட்சத்திரம், இன்றைய நம்பிக்கை நட்சத்திரங்களின் தோள்களில் அமர்ந்தபடி பவனிவந்தது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைச் சுமந்திருக்கும் இவர்கள் இருவரும் தங்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் வழிகாட்டுதலும் தந்த நாயகனுக்கு நன்றி செலுத்துவதன் குறியீடாக அமைந்தது இந்த நிகழ்வு.

விடைகொடுத்த மைதானம்

முதல் இன்னிங்ஸில் ஆட மைதானத்துக்குள் நுழைந்தபோது மைதானத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு மைதானத்துக்குள் சச்சின் பிரவேசித்தபோது பலரும் ஆச்சரியமடைந்தார்கள். அடுத்த இன்னிங்ஸ் ஆட வாய்ப்புக் கிடைக்காமல்போகலாம் என்பதை உணர்ந்த அனுபவசாலியின் செயலாகவே அது அமைந்தது. இதே மைதானத்தில்தான் அவரது முதல் தர ஆட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதே மைதானத்தில்தான் அவரது மகத்தான கனவாகிய உலகக் கோப்பையைக் கையில் ஏந்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதே மைதானத்தில் பல சாதனைகளைப் புரிந்த சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி நாளன்று மைதானத்தைத் தொட்டுக் கும்பிட்டு விடைபெற்றார் .

கடினமான கேட்சைப் பிடித்து சச்சினின் கடைசி டெஸ்டில் சதமெடுக்கும் வாய்ப்பை மறுத்த சமி அதே வேகத்தை மட்டை வீச்சிலும் காட்டியிருந்தால் போட்டி இன்னும் ஒரு நாள் நீடித்திருக்கும். முதல் போட்டியில் மூன்று நாட்கள் தாக்குப்பிடித்த மே.இ. தீவுகள் அணி, இரண்டாம் போட்டியில் உணவு இடைவேளைக்குள் சுருண்டது. ஐந்து நாட்களும் தங்கள் மனம் கவர்ந்த நாயகனைப் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆட்டம் முடிந்து இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் பலர் அரங்கை விட்டுச் செல்ல மனமின்றி நின்றுகொண்டிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தொடர் இப்படிப் பாதியில் முடிந்தது குறித்து உங்களுக்கு வருத்தம் இருக்கிறதா என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊடக மேலாளர் தேவேந்திர புரபுதேசாயைக் கேட்டதற்கு, “அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இரண்டு அணிகள் ஆடும் ஆட்டத்தின் தரத்தைப் பொறுத்த விஷயம் அது” என்று பதில் சொன்னார். சச்சின் விடைபெறுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “ஈடு செய்ய முடியாத இழப்பு இது. இந்தக் காட்சியைப் பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சியை எங்கே பார்க்க முடியும்?” என்று அவர் சொன்னது மைதானத்தில் இருந்த அனைவரது உணர்ச்சிகளின் சாரமாக வெளிப்பட்டது.

சச்சின்ன்ன்ன்... சச்சின்ன்ன்ன்...

ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்து கொண்டிருந்தபோது ரசிகர்களின் ஆரவாரம் மேலும் மேலும் உச்ச ஸ்தாயியை எட்டிக்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் சச்சினை மைதானத்தில் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் ரசிகர்களின் உணர்ச்சிகளில் வெளிப்பட்டது. சச்சின் நின்றிருந்த இடத்துக்கு அருகில் இருந்தவர்களிடம் இருந்து ‘‘சச்சின்ன்ன்ன்ன், சச்சின்ன்ன்’’ என்னும் மந்திர உச்சாடனத்தின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் கூடியபடி இருந்தது. உணவு இடைவேளைக்கு இருபது நிமிடம் இருக்கும்போது பிரக்யன் ஓஜாவின் ஓவர் முடிந்தது. உடனே ரசிகர்கள் அனைவரும் கேப்டனுக்குத் தலைவர்களாக மாறி “வீ வாண்ட் சச்சின்” என்று கோஷமிடத் தொடங்கினார்கள். போட்டி கைக்கு வந்து விட்ட நிலையில் புன்னகையுடன் இதை யெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தோனி சச்சினைப் பந்து வீச அழைத்தார். ரசிகர் களின் உற்சாகம் கரைகடந்தது. சச்சினின் பந்து மட்டையாளரின் கால் காப்பில் பட்டதும் மைதானத்தில் இருந்த 11 பேருடன் அரங்கில் இருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களும் சேர்ந்து அப்பீல் செய்தார்கள். நடுவர் அசைந்துகொடுக்க வில்லை என்பது வேறு விஷயம்.

இனி...

இனி எந்த அணித்தலைவருக்கும் ரசிகர்கள் இப்படி யோசனை சொல்ல மாட்டார்கள். இனி எந்த ரசிகரும் நடுவரிடம் அப்பீல் செய்ய மாட்டார். இனி யாருடைய பிரவேசத்துக்கும் மைதானம் அதிரும் கரகோஷம் கேட்காது. இனி யார் ஆட்டம் இழக்கும்போதும் மயான அமைதி சூழாது. கிரிக்கெட் இனி உணர்ச்சி வேகம் தணிந்த நிலையில் ஆடப்படலாம். ஆனால் கிரிக்கெட் ஆடப்படும் விதத்தையும் அதன் எல்லைகளையும் மாற்றி எழுதியவரின் தடம், கிரிக்கெட் ஆடப்படும் ஒவ்வொரு மைதானத்திலும் உணரப்படும். இவரது சாதனைகள் பிறருக்கான லட்சியப் புள்ளிகளாக விளங்கும். இந்தியாவாலும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதைச் செயலில் காட்டியவரின் கடைசித் தொடர் அந்த ஆதிக்கத்தின் அழுத்தமான குறியீடாக அமைந்தது அந்தச் சாதனையாளருக்குப் பொருத்தமான பிரியாவிடைதான்.

அரவிந்தன் - தொடர்புக்கு: aravindanmail@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x