புஸ்வாணமானது ஆமிரின் உலகக் கோப்பை கனவு

புஸ்வாணமானது ஆமிரின் உலகக் கோப்பை கனவு
Updated on
2 min read

சூதாட்ட விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் முன்னதாகவே உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினாலும், அவர் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிபி தலைமைச் செயல் அதிகாரி சுபன் அஹமது கூறியிருப்பதாவது:

ஆமிர் மீதான 5 ஆண்டு தடைக்காலம் 2015 ஆகஸ்டில்தான் நிறைவடைகிறது. 5 ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே ஆமிர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட ஐசிசி அனுமதிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

ஆமிரின் தடைக்காலத்தை மறுபரிசீலனை செய்து அவரை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட வைப்பதற் காக ஐசிசியின் அனுமதியைப் பெற முயற்சித்தோம். ஐசிசியின் அனுமதி கிடைத்தால் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு ஆமிர் தயாராக உள்ளார் என்றார்.

முகமது ஆமிரின் வயதைக் கருத்தில் கொண்டு அவருடைய தடைக்காலத்தை குறைப்பது குறித்து ஐசிசி பரிசீலிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பிசிபி தலைவர் நஜம் சேத்தி , வரும் ஜூனில் ஐசிசியின் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்போது இந்த ஆண்டின் கடைசியில் ஆமிர் முதல் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பேசிய அஹமது, “நீண்டகால தடை பெற்ற வர்கள் தடைக்காலம் முடிந்ததும் உடனடியாக கிரிக்கெட்டுக்கு திரும்பும் வகையில் ஐசிசி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரைக் கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வீரர் தனது பயிற்சியைத் தொடங்கு வதற்காக தடைக்காலம் முடியும் வரையும் காத்திருக்க தேவை யில்லை. இதன்மூலம் தடைக் காலம் முடிந்தவுடனேயே ஒருவர் நேரடியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் ஆமிர் விஷயத்தைப் பொறுத்தவரையில் அவர் 5 ஆண்டு தடைக்காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என ஐசிசி விரும்புகிறது. அதனால் அவர் 2015 உலகக் கோப்பையில் விளையாட முடியாது” என்றார்.

இது தொடர்பாக “ஜியோ சூப்பர்” தொலைக்காட்சிக்கு பேட்டி யளித்துள்ள ஆமிர், “நான் எப்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியும் என்பது குறித்து சிந்திக்க வில்லை. எனக்கு அது இப்போது முக்கியமானதும் கிடையாது. ஏனெனில் கடவுள் நான் விளை யாடுவதை உறுதி செய்து விட்டால் அப்போது அதை யாராலும் தடுக்க முடியாது“ என்றார்.

2010-ல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய லண்டன் நீதிமன்றம் சல்மான் பட்டுக்கு 18 மாதங்களும், முகமது ஆசிப்புக்கு ஓர் ஆண்டும், முகமது ஆமிருக்கு 6 மாதமும் சிறைத்தண்டனை விதித்தது. ஆமிருக்கு அப்போது 18 வயது மட்டுமே ஆகியிருந்ததால் அவரின் வயதை கணக்கில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் ஆமிருக்கு மட்டும் குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது ஐசிசி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in