Published : 03 Jan 2015 07:10 PM
Last Updated : 03 Jan 2015 07:10 PM

தோனிக்கு ஒரு சராசரி ரசிகனின் கடிதம்

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனிக்கு ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனின் கடிதம்.

அன்புள்ள தோனி,

நான் விளையாட்டைப் பற்றி அலசும் பத்திரிகையாளன் அல்ல. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் விளையாட்டை அவ்வளவாக பார்த்தவன் அல்ல. கங்குலி, அசாருதீன் ஆகியோருடன் உங்களை ஒப்பிட்டுப் பேசவும் எனக்குத் தெரியாது.

ஆனால், உங்களைப் பற்றி எழுத இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் தலைமையேற்ற இந்திய அணி அயல் நாட்டில் எப்படி விளையாடுகிறது என்பதைப் பார்க்க அதிகாலை எழுந்து டிவி முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் ஆட்டத்தை முடிக்கும் விதத்தைப் பார்ப்பதற்காகவே நிறைய செலவழித்து, பலரிடம் டிக்கெட்டுகளுக்காக கெஞ்சியுள்ளேன். உங்களது இரண்டாவது வீடான சென்னையில், பறக்கும் ரயிலில் தொங்கிக் கொண்டு, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்களின் கர்ஜனையை கேட்க விரைந்துள்ளேன்.

இந்த அனுபவங்களால் தான், நீங்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது என்ற உங்கள் முடிவு துணிவானது எனச் சொல்ல விரும்புகிறேன். கடந்த காலத்தில் பல கிரிக்கெட் வீரர்கள் இருந்துள்ளார்கள். நான் தனியொருவரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. ஆனால் பலர் தங்கள் இருப்பை நீட்டித்து காலம் கடந்து அணியில் இருந்துள்ளனர். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை. போதுமான காலம் இருந்து, செய்ய முடிந்தவற்றை செய்தாகிவிட்டது என்று உங்களுக்கு தெரிந்துள்ளது. அதான் நீங்கள் விலகிவிட்டீர்கள். இந்த ஓய்வு அறிவிப்பு உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும். என்னைப் போன்ற ரசிகர்கள் அந்த முடிவில் தலையிடவிடாமல் செய்தது கடுமையாக இருந்திருக்கும்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த ஃபார்மை விராட் கோலி திரும்பப் பெற்று தயாராகி வரும் வேளையில், கிரிக்கெட்டின் முக்கிய வடிவமான டெஸ்ட் போட்டியிலிருந்து நீங்கள் ஓய்வினை அறிவித்திருப்பது புத்திசாலித்தனமானதாகத் தெரிகிறது. கண்டிப்பாக தொடரின் நடுவில் நீங்கள் ஓய்வு அறிவித்ததால், விமர்சகர்கள் உங்களை தாக்கக் கூடும். ஆனால் கோலி தயாராக இருப்பதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள் என்று உங்கள் ரசிகர்களான எங்களுக்கு தெரியும்,

இதுதான் உங்கள் சிறப்பு, கேப்டன். எப்போது எதைச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். 2007-ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கடைசி ஓவரை வீச ஜோகிந்தர் சர்மாதான் சரியான ஆள் என்று உங்களுக்கு தெரிந்துள்ளது. யாரும் மறக்க முடியாத, தரம்ஷாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் இர்ஃபான் பதானின் ஓவரில் அடித்து வெற்றி பெற முடியும் என்று உங்களுக்கு தெரிந்துள்ளது, இலங்கைக்கு எதிரான கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நீங்கள் வழக்கமாக ஆடும் நிலைக்கு மாறாக, முன்னரே வந்து ஆடினால் வெற்றி பெறலாம் என உங்களுக்குத் தெரிந்துள்ளது.

மைதானத்தில் ரசிகர்க் கூட்டத்தின் நடுவிலிருந்து உங்களைப் பார்க்கும் போது, சில சமயம் உங்கள் செயல்கள் எங்களுக்குப் புரிகிறது. நடப்பதை யூகிக்கும் வகையில் உங்களுக்கு ஏதோ ஒரு முன்னுணர்வு இருப்பது போலத் தெரிகிறது. உங்கள் ஃபீல்டிங் மாற்றங்கள் அப்படித்தான் தெரிகின்றன. ஒரு ஐபிஎல் போட்டியில் நடந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. பந்துவீச்சாளருக்கு அருகில் சென்று, ஏதோ பேசிவிட்டு, ஒரு வீரரை இடம் மாற்றி நிற்க வைத்தீர்கள். அந்த காலத்து ஆட்கள் அதைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த பந்திலேயே விக்கெட் விழுந்தது.

ஒரு பத்திரிகையாள ரசிகனாக உங்களிடம் சில வார்த்தைகள் பேசச் சொல்லி அணுகியபோது, "மன்னிக்கவும் நண்பா. நீங்கள் அணியின் மேனஜரிடம் தான் பேச வேண்டும்" என்றீர்கள். எவரும் அணுகலாம் என்ற நிலையில் நீங்கள் இருப்பது வெகுவாக ஈர்த்தது. நாம் நம் நண்பர்களிடம் விளையாடுவதைப் போல, நீங்கள் அஸ்வினுக்குப் பின்னால் சென்று மெதுவாக அவரை பயமுறுத்திய விதத்தில் உங்கள் எளிமை பிரமிக்க வைத்தது.

ஒரு வேளை சிறு நகரத்திலிருந்து வந்ததால் உங்களிடம் இந்த குணங்கள் இருக்கின்றன என நினைக்கிறேன். சர்வதேச அளவில் புகழ், பணம், மரியாதை வந்தும் அந்த குணங்களை நீங்கள் இழக்கவில்லை. இல்லையென்றால் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு தொடரின் நடுவில், வாகன நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் நீங்கள் ஏன் பைக் ஓட்ட விரும்ப வேண்டும்? இல்லையென்றால் ஏன் யாருக்கும் தெரியாமல் பைக்கில் நகரத்தைச் சுற்றி பார்க்கப் புறப்பட்டு, சக்கரம் பழுதானதால் ஒரு நெடுஞ்சாலையில் காத்திருக்க வேண்டும்?

உங்களிடம் இந்த சின்ன சின்ன விஷயங்கள் தான் ரசிகர்களாகிய எங்களுக்குப் பிடித்தது. அவை தான் தோனி என்ற மனிதனை, தோனி என்ற கிரிக்கெட் வீரனை விட உயர்ந்த இடத்தில் வைக்கிறது.

அன்புடன்

ஒரு ரசிகன்

பி.கு - வருடம் முடிய சில நாட்கள் மட்டுமே இருந்த போது, நீங்கள் முடிவெடுத்த தருணமும், அது எதிர்பாராத வகையில் எங்களை வந்து சேர்ந்த விதமும். எங்களுக்குப் பிடித்துள்ளது. வெள்ளை உடையை விடுத்து வண்ண உடையை அணியுங்கள் தோனி. உங்களுக்காக விசில் அடிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

- © தி இந்து ஆங்கிலம், தமிழில் - கா.கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x