

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இலங்கையின் குமார் சங்ககாரா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுவரை முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சங்ககாரா 203 ரன்கள் எடுத்தார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதே டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்த நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார். இது தரவரிசையில் அவரது அதிகபட்ச முன்னேற்றமாகும்.
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி 3 இடங்கள் முன்னேறி 12-வது இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. முரளி விஜய் 22-வது இடத்தில் உள்ளார்.