

இந்திய அணிக்குத் தேவைப்படும் அளவுக்கு, திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. உள்ளூர் போட்டி களிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையுள்ள பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
விராட் கோலியைப் பற்றி இப்போதே கணிக்கக் கூடாது. ஆனால், தன்னால் தலைமை யேற்க முடியும் என நிரூபித்திருக் கிறார். ஆஸ்திரேலிய தொடரில் அவரின் தனிப்பட்ட செயல்பாடு களை அவருடைய பலமாகக் கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட கேப்டனாகச் செயல்பட அவரை அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை நன்றாகவே உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இந்திய பந்து வீச்சின் தரம் மோசமாக உள்ளது. அதனால், டெஸ்ட் ரேங்கிங்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சுழற்பந்து வீச்சோ, வேகப் பந்து வீச்சோ உங்களால் தொடர்ந்து சிறப்பாக பந்து வீச முடியாவிட்டால், நீங்கள் உலகத்தர மான பந்துவீச்சாளராக இருக்க முடியாது. முடிவுகளைத் தீர்மானிக்க முடியாவிட்டால் தரவரிசையில் சரிவைச் சந்திக்க வேண்டியதுதான்.
தரவரிசையைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படுபவனல்ல. 5-வது இடமோ,7-வது இடமோ அதில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், நாம் நீண்ட காலத்துக்கு வெளிநாடுகளில் விளையாடவுள்ளோம். எனவே, நமது தரவரிசையில் நிச்சயம் ஏற்றம் வேண்டும்.
இந்தியாவில் நன்றாக விளையாடுகிறோம். பேட்டிங் வரிசையும் உள்ளது. இங்கு மிக நன்றாக விளையாடும் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஏறத்தாழ 2 ஆண்டுகள் வெளிநாடுகளில் அதிகம் விளையாடவில்லை. அதனால் தரவரிசையில் முன்னிலையில் இருந்தது குறித்து பெருமிதப்பட்டோம்.
எனவே, தரவரிசை என்பதைவிட வெளிநாடுகளில் நாம் எப்படி விளையாடுகிறோம், கடந்த 14 மாதங்களில் சந்தித்த பிரச்சினைகளில் எப்படி கவனம் செலுத்தப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.
திறமைக்கு பஞ்சம்
ரஞ்சி மற்றும் உள்ளூர்ப் போட்டி களை கவனித்து வருகிறேன். அங்கு திறமையானவர்கள் அதிகம் இல்லை. துரதிருஷ்டவசமாக, நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் இல்லை.
இதில் மாற்றம் வரும் என நம்புவோம். சில மாதங்களுக்குப் பிறகு, திறன் மிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் கிடைக்கக் கூடும். ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் 140 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் பந்து வீசினர். இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் மிகுந்த நம்பிக்கையளித்தனர்.
அவர்களின் காலம் முடிந்து விட்டதாக நான் கூறவில்லை. அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதும், கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளும் உள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்கக் கூடிய கணிசமான பந்துவீச்சாளர்கள் வெளியே வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை. எனவே, இருக்கும் பந்துவீச்சாளர்களை நாம் மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, டிராவிட் தெரிவித்தார்