

டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்து இலங்கையின் சங்கக்காரா சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
நியூசி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சங்கக்காரா 33 நாட் அவுட் என்று விளையாடி வருகிறார். அவர் 224 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களை எட்டி சாதனை புரிந்துள்ளார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 247 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களைக் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. விக்கெட் கீப்பர் பிரசன்ன ஜெயவர்தனே கடைசி பந்தில் ஆட்டமிழக்க சங்கக்காரா 33 ரன்களுடன் விளையாடி வருகிறார். இவர் 5 ரன்கள் எடுத்தால் 12,000 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டிரெண்ட் போல்ட் பந்தை லெக் திசையில் 2 ரன்களுக்கு தட்டி விட்டு அவர் அதிவிரைவு 12,000 டெஸ்ட் ரன்களை பூர்த்தி செய்தார்.
இன்று டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதலில் நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி பசுந்தரை ஆட்டக்களத்தில் பந்துகள் ஸ்விங் ஆக கடைசி 8 விக்கெட்டுகளை 80 ரன்களுக்கு இழந்தது. கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 69 ரன்களை எடுத்தார். ருதர்போர்ட் 37 ரன்களையும், ராஸ் டெய்லர் 35 ரன்களையும் எடுத்தனர். அபாய வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 2-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மல் 3 விக்கெட்டுகளையும், பிரசாத் 2 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் கருணரத்ன (15) டிரெண்ட் போல்ட் பந்தை துரத்தி ஜேம்ஸ் நீஷமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குஷல் சில்வா 5 ரன்களில் டக் பிரேஸ்வெல் பந்தில் பிளேய்ட் ஆன் முறையில் அவுட் ஆனார். லாஹிரு திரிமன்ன (0) மிட் ஆஃபில் சுலபமான மெக்கல்லம் கேட்சிற்கு அவுட் ஆனார். கேப்டன் மேத்யூஸ் 15 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதீயின் அபாரமான பந்துக்கு ‘ஸ்கொயர்’ ஆகி எட்ஜ் செய்து வெளியேறினார்.
இலங்கை 78/5. பிரேஸ்வெல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாளை ஆட்டத்தின் 2ஆம் நாள்.