

முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்தியா ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற ஆட்டம், மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழக்கப்பட்டன.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இன்று சிட்னியில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி. அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.
இரண்டு ஓவர்கள் முடிந்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டதால், 44 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. துவக்க வீரர்கள் ரஹானே, தவான் இருவரும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 7-வது ஓவரில் தவான் 8 ரன்களுக்கு ஸ்டார்க் வீசிய பந்தில் வீழ்ந்தார்.
அடுத்து களமிறங்கிய ராயுடு சற்று வேகமாக ரன் சேர்க்க முற்பட்டார். அவர் 24 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது மார்ஷின் பந்தில் அதிரடியான ஷாட் ஒன்றை அடிக்க முற்பட, டேவிட் வார்னர் அதை அற்புதமாக பிடித்து ராயுடுவை ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து கோலி களமிறங்க, அடுத்த சில ஓவர்களிலேயே மீண்டும் மழை வர, ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை ஓயாமல் இருக்க, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு, இந்த இரு புள்ளிகளால் சாதகமே. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தை இந்தியா வென்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.