Published : 10 Jan 2015 03:49 PM
Last Updated : 10 Jan 2015 03:49 PM

சிட்னியில் வெற்றிக்குச் செல்வதைத் தடுத்த ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்களின் துல்லியம்

சிட்னி டெஸ்ட் கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றி இலக்கு 349 ரன்களை துரத்த முடிவெடுக்காததற்குக் காரணம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சின் துல்லியமே.

சிட்னி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் திருப்பு முனைகளுடன் டிரா ஆனது. குறிப்பாக அஜிங்கிய ரஹானே, புவனேஷ் குமார் ஆகியோர் கடைசி 11 ஓவர்களை திறம்பட விளையாடினர்.

முதல் நாள் எடுத்த 251/6 என்ற நிலையில் ஸ்மித் டிக்ளேர் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அவரும் டிக்ளேர் செய்தார். இந்தியாவுக்கு 349 ரன்கள் வெற்றி இலக்கு.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 363 ரன்கள் இலக்கையே விராட் கோலி, முரளி விஜய் ஆட்டத்தினால் துரத்த முடிந்த இந்திய அணி நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றிக்கு விளையாடும் என்றே கருதப்பட்டது. தேநீர் இடைவேளை வரை ஒரு வேளை அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் அதன் பிறகு வெற்றிக்கு முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கலாம்.

முரளி விஜய்யும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு அப்படித்தான் ஆடினார். நேதன் லயனுக்கு அடிலெய்ட் போலவே ஆஃப் ஸ்பின் இயல்பான லெந்த்தில் நிறைய ஸ்பாட்கள் இருந்தன. அதில் பிட்ச் ஆனால் பந்துகள் திரும்பியதோடு, எகிறவும் செய்தன. ஏற்கெனவே 10-வது ஓவரில் முரளி விஜய் முதல் பந்தை நேராக ஒரு அபார பவுண்டரி அடித்தார், பிறகு மேலேறி வந்து ஒரு மிட்விக்கெட்டில் மேலும் அபாரமான சிக்ஸரை அடித்தார்.

ஆனால் அடுத்த பந்து எட்ஜ் வாங்க, கேட்சை பிராட் ஹேடின் கோட்டை விட்டார். இப்படியாக அடித்து ஆடினாலும் விக்கெட் விழாது என்ற உறுதிப்பாடு பிட்சில் இல்லை. அடிலெய்டில் ஒரு முனையில் ஒரு ஸ்பாட்தான் இருந்தது. மற்றபடி பிட்சில் பந்துகள் பேட்டிற்கு அருமையாக வந்தது, அதனால் ஷாட்கள் ஆட முடிந்தது. ஆனால் சிட்னி கடைசி நாள் பிட்ச் இந்திய துணைக்கண்ட பிட்ச் போல் மந்தமாகவும், ஷாட் ஆடினால் கூட சரியாக மட்டையில் சிக்காத ஆட்டக்களமாகவும் மாறியிருந்தது. ஒருவேளை இதில் வெற்றி இலக்கை துரத்த ஆடியிருந்தால் இன்னும் முன்னமேயே கூட ஆட்டத்தை இந்தியா இழந்திருக்கும்.

உணவு இடைவேளைக்குப் பிறகு முரளி விஜய்க்கு மீண்டும் ஹாரிஸ் பந்தில் ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டது. இம்முறை ஷான் மார்ஷ் விட்டார். தேநீர் இடைவேளைக்கு 10 நிமிடங்கள் முன்னர் முரளி விஜய், ஆட்டத்தின் 54-வது ஓவரில் நேதன் லயன் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார்.

முதலில் ஒரு ஸ்வீப், பிறகு மேலேறி வந்து புல்டாஸாக மாற்றிக் கொண்டு லாங் ஆனில் ஒரு பவுண்டரி, கடைசி பந்தில் மேலேறி வந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்ஸ் என்று அந்த ஓவரில் 16 ரன்களை விஜய் அடிக்க 54 ஓவர்களில் ஸ்கோர் 151/2 என்று இருந்தது. அதாவது 36 ஓவர்களில் 198 ரன்கள் இலக்கு என்பது ஒருநாள் கிரிக்கெட் ரன் விகிதம் போலவே தெரியும். ஆனால் அதில் களவியூகத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உண்டு. இது டெஸ்ட் கிரிக்கெட். இதில் பீல்ட் கட்டுப்பாடுகள் என்பது கிடையாது.

முரளி விஜய் ஆடத் தொடங்கியவுடன் வெற்றிக்குத்தான் செல்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆஸி. பவுலர்கள் தொடர்ந்து இந்திய விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தொடங்கினர். விஜய் தேவையில்லாமல் ஷாட் பிட்ச் பந்து ஒன்றை தொய்வாக கட் செய்து அவுட் ஆனார்.

அதன் பிறகு கோலியையும் ஆஸி. பவுலர்கள் நெருக்கினர். அவரும் பாசிடிவ்வாக ஆட முயன்றார் அதில் அவுட் ஆனார். மிட்செல் ஸ்டார்க் ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை உள்ளே கொண்டு வந்து பிறகு லேட் ஸ்விங் செய்தார் அருமையான பந்துக்கு கோலி அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு பதட்டமான ரெய்னாவுக்கு நெருக்கடியை ஆஸ்திரேலியா அதிகரித்தது. லெக் கல்லியில் ஒரு பீல்டரை நிறுத்தி மிட்செல் ஸ்டார்க் வீச ரெய்னா கிரீஸிற்குள் நிற்க பணிக்கப்பட்டார். 2 பந்துகளை ஷாட் பாலாக வீச 3-வது பந்தையும் அதனை எதிர்பார்த்தார். ஆனால் இம்முறை லெந்தில் விழுந்த பந்து இன்கட்டராகி பேடை தாக்க எல்.பி.டபிள்யூ-வின் விளக்கமாகத் திகழ்ந்து அவுட் ஆனார். சிட்னியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகி ‘பேர்’ வாங்கினார்.

சஹா, அஸ்வின் என்று அடுத்தடுத்து ஆட்டமிழக்க 78.2 ஓவர்களில் 217/7 என்று ஆனது. இன்னும் 11.4 ஓவர்களை தாக்குப் பிடிக்க வேண்டும், ரஹானே மட்டும்தான் கிரீசில் உள்ளார். ஆனால் புவனேஷும், ரஹானேயும் சில பதட்டமான தருணங்களை மனபலத்துடன் எதிர்கொண்டு டிரா செய்தனர்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் இருந்தார். அவர் விக்கெட்டுகளை வீழ்த்தப் பணிக்கப்பட்டவர் எனவே அவரது பவுலிங்கில் ரன்களும் வந்தவண்ணம் இருந்தன.

ஆனால், இந்தப் போட்டியில் ரியான் ஹேரிஸ், ஹேசில்வுட், வாட்சன், ஸ்டார்க் என்று அனைவருமே துல்லியமாக வீசியதோடு, ரன்கள் கட்டுப்படுத்தும் கள அமைப்புடன் விக்கெட்டுகள் வீழ்த்தும் கள அமைப்பும் கலந்து செய்யப்பட்டது. அதனால்தான் இலக்கைத் துரத்துவது கடினமாகப் போனது. அடிலெய்டில் தேநீர் இடைவேளையின் போது 200 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி, ஆனால் இங்கு 160 ரன்கள்தான் எடுக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் ஆஸி. வேகப்பந்து வீச்சின் சிக்கனம் மற்றும் துல்லியமுமேயாகும்.

இந்தியா எடுத்த 252/7-ல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஹேரிஸ், வாட்சன் ஆகியோர் 57 ஓவர்களை வீசி 19 மைடன்களுடன் 123 ரன்களையே விட்டுக் கொடுத்ததோடு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். லயன் 30.5 ஓவர்களை வீசி 110 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் விக்கெட் வீழ்த்தும் பவுலர் என்பதால் ரன்களும் வந்தது, விக்கெட்டுகள் விழும் வாய்ப்புகளும் அதிகமாக உருவாகின.

எனவே. டிரா என்பது ஒரு சிறந்த முடிவாகவே தெரிகிறது. கோலி ஆட்டம் முடிந்தவுடன் கூறியது போல், வெற்றிக்கு ஆடியிருக்கலாம், தேநீர் இடைவேளைக்குப் பிறகு அப்படி ஒரு யோசனை இருந்தது. ஆனால் முரளி விஜய் அவுட் ஆனவுடன் அதற்கான வாய்ப்பு குறைந்தது என்றதோடு, ஆஸி. வீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டதால் இலக்கை நோக்கிச் செல்ல முடியவில்லை, என்றார்.

அவர் கூறியது முற்றிலும் உண்மைதான். மெல்போர்னில் செய்த டிராவை விட இது சிறந்த டிரா ஏனெனில் இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இத்தகைய துல்லியத்தைக் கொண்டு வந்தால்தான் இந்தியா அயல்நாடுகளில் வெற்றி பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x