மே.இ.தீவுகள் உலக சாதனை வெற்றி: 44 பவுண்டரிகள் 24 சிக்சர்கள்

மே.இ.தீவுகள் உலக சாதனை வெற்றி: 44 பவுண்டரிகள்  24 சிக்சர்கள்
Updated on
1 min read

வாண்டரர்ஸில் நேற்று இரவு நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் மே.இ.தீவுகள் உலக சாதனை துரத்தலை நிகழ்த்தியது. இந்தப் போட்டியில் மொத்தம் 44 பவுண்டரிகள் 24 சிக்சர்காள் விளாசப்பட்டுள்ளது.இது மற்றுமொரு டி20 சாதனையாகும்.

இதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சவுதாம்ப்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டியில் 43 பவுண்டரிகள் 23 சிக்சர்கள் இரு அணிகளாலும் அடிக்கப்பட்டதே டி20 சாதனையாக இருந்து வந்தது. ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 248 ரன்களைக் குவித்து சாதனை புரிந்தது. ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் ஃபின்ச் 11 பவுண்டரிகள் 14 சிக்சர்களுடன் 63 பந்துகளில் 156 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தகுந்தது.

நேற்று இரு அணிகளும் சேர்ந்து 467 ரன்களைக் குவித்தன. இது டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமான ரன்குவிப்பாகும். மேல் குறிப்பிட்ட ஆஸ்திரேலியா-இங்கிலாந்து டி20 போட்டியில் 457 ரன்கள் எடுக்கப்பட்டது.

ஃபாப் டூ பிளேசிஸ் நேற்று 119 ரன்களை குவித்தார். தோல்வியுற்ற போட்டிகளில் இதுவே ஒரு தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்களாகும் இது. இதற்கு முன்னர் 2007 டி20 உலகக்கோப்பை போட்டி ஒன்றில் கிறிஸ் கெய்ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 117 ரன்களைக் குவித்தார். ஆனால் அந்தப் போட்டியில் மே.இ.தீவுகள் தோல்வியைச் சந்தித்தது.

டி20 கிரிக்கெட்டில் கேப்டன் சதம் எடுப்பது இது 2-வது முறை. திலகரத்ன தில்ஷன் பல்லிகிலே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதற்கு முன்னர் 104 ரன்களை எடுத்தார்.

டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் 45 போட்டிகளில் 87 சிக்சர்களை அடித்துள்ளார். பிரெண்டன் மெக்கல்லமும் 87 சிக்சர்களை அடித்துள்ளார். ஆனால் பிரெண்டன் மெக்கல்லம் 70 போட்டிகளில் 87 சிக்சர்கள் அடித்துள்ளார்.

கிரிக்கெட்டின் 3 வடிவங்களான டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள் என்று அனைத்திலும் சதம் எடுத்த வீர்ர்கள் மொத்தம் 8 பேர்: டுபிளேசிஸ், கெய்ல், மெக்கல்லம், தில்ஷன், ரெய்னா, ஜெயவர்தனே, மார்டின் கப்தில் மற்றும் அகமது ஷேஜாத் ஆகியோர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in