கோலியையும் தோனியையும் ஒப்பிடுவது கூடாது: கங்குலி

கோலியையும் தோனியையும் ஒப்பிடுவது கூடாது: கங்குலி
Updated on
1 min read

விராட் கோலியும், தோனியும் வேறு வேறு அணுகுமுறைகள் கொண்ட கேப்டன்கள். எனவே ஒப்பிடுவது நியாயமாகாது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

"விராட் கோலியையும், தோனியையும் ஒப்பிட வேண்டும் என்ற ஆர்வ மிகுதி ஏற்படுவது சகஜமே. இவர்கள் இருவரையும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிடுவதும் நியாயமாகாது.

கோலி இப்போது டெஸ்ட் கேப்டனாகியுள்ளார். ஒரு தலைவருக்கான அனைத்து குணங்களும் அவரிடம் உள்ளன. அவர் ஆக்ரோஷமாக செயல்படுவதால் சிறப்பாகவே கேப்டன் பொறுப்பு வகிப்பார் என்றே நான் நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு முறையும் வெற்றிகளையே விரும்புகிறார். அவர் உணர்ச்சியுடன் களத்தில் இறங்குகிறார். அனுபவத்தின் மூலம் அவர் மேலும் சிறந்த கேப்டனாக உருவெடுப்பார்” என்றார் கங்குலி.

இந்திய பந்துவீச்சு பற்றி...

சரியான அளவு மற்றும் திசை மிக முக்கியமானது. ஆஸி. பவுலர் ஜோஷ் ஹேசில்வுட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அன்று சிட்னி கடைசி நாளில் 8 ஓவர்கள் வீசி 3 ரன்களையே அவர் விட்டுக் கொடுத்தார். ஒரே திசை மற்றும் அளவில் வீசினார். அதுதான் டெஸ்ட் பந்துவீச்சு.

இந்திய பவுலர்கள் அப்படி வீச வழிமுறைகளைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். திறமை இருக்கிறது. சீராக மணிக்கு 140 கிமீ வேகம் வீசுகின்றனர். ஆனால் துல்லியமான பவுலிங் இல்லை. இந்தத் தொடரை முன்வைத்து அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

அஸ்வின் பந்துவீச்சு பற்றி...

அஸ்வின் இன்னும் சிறப்பாக வீச வேண்டும், இப்போது அவர் அனுபவம் பெற்ற பந்துவீச்சாளராக உள்ளார். அவர் பந்து வீசும் லைன் இன்னும் கொஞ்சம் நன்றாக அமைவது அவசியம். குறிப்பாக அயல்நாடுகளில் அவர் பந்துகளை வீசும் திசை சரியாக இல்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவர் வீசப் பழகிக்கொள்ள வேண்ட்கும், தினுசு தினுசாக வீசுவதை அவர் முதலில் கடுமையாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருநாள் தொடர் பற்றி...

ஏற்கெனவே இது நீளமான ஒரு தொடராக உள்ளது. வீரர்கள் தங்களைப் புத்துணர்வுடன் வைத்துக் கொள்வது அவசியம். உலகக்கோப்பை அணித் தேர்வில் தேர்வாளர்கள் நல்ல அணியையே தேர்வு செய்துள்ளனர். சரியான சமச்சீர் தன்மையை ஏற்படுத்தியதாக நான் கருதுகிறேன். தோனி இருக்கிறார் என்று சொல்லத் தேவையில்லை. அவரைப்போன்ற ஒருநாள் கிரிக்கெட் வீரரை பார்ப்பது அரிது. வரும் மாதங்களில் தோனி ஒரு பெரிய சக்தியாக விளங்குவார் என்று நினைக்கிறென்.

இவ்வாறு கூறினார் கங்குலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in