

ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் உடனடியாக உள்நாட்டுக் கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார்.
2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றிருந்த போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனையும் 5 ஆண்டுகால தடையும் மொகமது ஆமீருக்கு விதிக்கப்பட்டது.
இவரது தடை 2015 செப்டம்பர் 2-ஆம் தேதிதான் முடிவடைகிறது. ஆனால், விசாரணைகளுக்கு மொகமது ஆமீர் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கியதாலும், தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதாலும், சூதாட்டம் பற்றிய தனக்கு தெரிந்த தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாலும் அவருக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு முன் கூட்டியே தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு தலைவர் ரோனி பிளானகன் கூறியதாக ஐசிசி செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக ஐசிசி-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் சீர்திருத்தக் கல்வியைப் பயின்றார் மொகமது ஆமீர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி விசாரணைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். இதனையடுத்து அவரை ஐசிசி மீண்டும் நேர்காணல் செய்து அவரது மனநிலையை ஆராய்ந்தது.
இதனடிப்படையில் அவர் முன்னதாகவே பாக். உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார். 17-வயதில் தடை செய்யப்பட்ட ஆமீர் தற்போது 22-வது வயதில் மீண்டும் பாகிஸ்தான் மைய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளார்.
கேப்டன் சல்மான் பட் தலைமையில் 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பேசி வைத்து வேண்டுமென்றே நோ-பால் வீசியதாகவும் அதற்கு தொகை ஒன்றை லஞ்சமாகப் பெற்றதாகவும் மொகமது ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.