Last Updated : 25 Jan, 2015 12:29 PM

 

Published : 25 Jan 2015 12:29 PM
Last Updated : 25 Jan 2015 12:29 PM

1983 உலகக்கோப்பை: திருப்புமுனைத் தருணங்கள்

முதல் அரையிறுதி இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும். இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகளோடு ஒப்பிடப்படும் அளவுக்கு வலுவான அணியாக விளங்கியது. ஆல் ரவுண்டர் இயான் போத்தம் அணியின் பெரும் வலிமையாக விளங்கினார். க்ரீம் ஃப்ளவர், டேவிட் கோவர், ஆலன் லேம்ப், மைக் கேட்டிங், போத்தம் என்று வலுவான மட்டையாளர்களைக் கொண்ட அந்த அணியைக் கபில் தலைமையிலான இந்தியப் பந்து வீச்சு திணறவைத்தது. இந்தியா அரையிறுதிக்கு வந்தது அதிருஷ்டம் என்று நினைத்தவர்களை வாயடைக்க வைத்த பந்து வீச்சு அது.

தாக்குதல் வியூகத்தின் முன்னணியில் நின்ற கபில் 11 ஓவர்களில் 35 ரன் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி னார். 12 ஓவர்களில் 43 ரன் கொடுத்த ரோஜர் பின்னி 2 விக்கெட்களை வீழ்த்தினார். கீர்த்தி ஆசாதும் மொஹீந்தர் அமர்நாத்தும் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசினர். ஆசாத் 12 ஓவர்களில் 28 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். அமர்நாத் 12 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 60 ஓவர்களில் இங்கிலாந்து 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசிப் பந்தில் கடைசி விக்கெட்டை (ஆலன் லேம்ப்) கபில் எடுத்தார்.

214 என்பது அவ்வளவு கடினமான இலக்கு அல்ல என்றாலும் ஓல்ட் ட்ரஃபோர்ட் ஆடுகளத்தின் தன்மையும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் திறமையும் அதைக் கடினமான இலக்காக உணரவைத்தன. ஆனால் இந்திய மட்டையாளர்கள் அசரவில்லை. எடுக்க வேண்டிய ரன் விகிதம் குறைவு என்பதை நன்கு உணர்ந்த அவர்கள் பதற்றமில்லாமல் இலக்கைத் துரத்தினார்கள். கவாஸ்கரும் காந்தும் வலுவான அடித்தளம் (முதல் விக்கெட்டுக்கு 46) அமைத்துக்கொடுத்தார்கள். 25 ரன் எடுத்து கவாஸ்கர் ஆட்டமிழக்க, அணியின் எண்ணிக்கை 50 ஆக இருக்கும்போது ஸ்ரீகாந்த் (19) ஆட்டமிழந்தார். ஆனால் அமர்நாத்தும் யாஷ்பால் ஷர்மாவும் இன்னிங்ஸை ஸ்திரப்படுத்தினார்கள். 146 ரன்னில் அமர்நாத் ஆட்டமிழக்க, சந்தீப் பாட்டீ லுடன் சேர்ந்து யாஷ்பால் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.

எடுக்க வேண்டிய ரன் விகிதம் குறைவு என்பதால் யாஷ்பாலும் அமர்நாத்தும் நிதானமாகவே ஆடினார்கள். அமர்நாத் 92 பந்துகளில் 46 எடுத்தார். யாஷ்பால் 115 பந்துகளில் 61. இங்கிலாந்தின் பந்து வீச்சை இவர்கள் இருவரும் கையாண்ட விதம் இந்திய ரசிகர்களுக்குச் சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. இந்திய நேரப்படி இரவுவரை நீடித்த இந்தப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அது அமைந்தது. சந்தீப் பாட்டீல் தன் இயல்புக்கேற்ப அடித்து ஆடினார். 32 பந்துகளில் 51 ரன் எடுத்தார். 54.4 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டி வரலாற்றின் பக்கங்களில் நுழைந்தது.

முதல் அரையிறுதி நடந்த அதே ஜூன் 22 அன்று இரண்டாவது அரையிறுதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் மே.இ. தீவுகள் அணி பாகிஸ்தானை துவம்சம் செய்தது. மோஷின் கான் (70), ஜாகீர் அப்பாஸ் (30), இம்ரான் கான் (17) ஆகியோரைத் தவிர பிறர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களைத்தான் பாகிஸ்தானால அடிக்க முடிந்தது.

சாம்பியன்களின் ஆட்டம் என்றால் என்ன என்று காட்டும் வகையில் மே.இ. தீவுகளின் ஆட்டம் அமைந்தது. 48.4 ஓவரில் (188-2) வென்றது. விவியன் ரிச்சர்ட்ஸ் (80), லாரி கோம்ஸ் (50) இருவரும் ஆட்டமிழக்கவில்லை.

பாகிஸ்தான் பந்து வீச்சை ஊதித் தள்ளிய தெம்புடன் மே.இ. தீவுகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கவனமான ஆட்டத்தின் மூலம் இந்தியா பதற்றமில்லாமல் வந்து சேர்ந்தது. இறுதிப் போட்டியில் இந்தியா என்றதுமே மே.இ. தீவுகள் அணியினர் உலகக் கோப்பை ஹாட்ரிக் பற்றிய கனவில் மிதக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஹாட்ரிக் அடிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. அதன் பிறகு உலகக் கோப்பையை அவர்களால் இன்றுவரை வெல்லவே முடியவில்லை.

ஒரு நாயகன் உதயமான தருணம்

இந்திய அணி கோப்பையை வென்றதில் அணியினர் அனைவருக்கும் பங்கு இருந்தது என்றாலும் அணித் தலைவர் கபில் தேவின் பங்கு தனித்து நிற்கிறது. அவரது தன்னம்பிக்கை, தலைமை உத்திகள், பந்து வீச்சு, மட்டை வீச்சு ஆகியவை அணிக்குப் பெரிதும் உதவின. ஜிம்பாப் வேக்கு எதிராக அவர் அடித்த 175 உலகக் கோப்பையின் திருப்புமுனைத் தருணங்களில் தலையாய இடம் வகிப்பது என்று சொல்லலாம்.

கபில் தேவ் களம் இறங்கியபோது அணியின் ஸ்கோர் 9 ரன்களுக்கு 4 விக்கெட். மேலும் 8 ரன்கள் எடுப்பதற்குள் இன்னொரு விக்கெட்டும் விழுந்தது. 17-5. அதன் பிறகு ரோஜர் பின்னி கை கொடுக்க, கபில் இந்திய இன்னிங்ஸை மீட்டெடுத்தார். ஸ்கோர் 78ஆக இருக்கும்போது பின்னியும் ஆட்டமிழந்தார் (22). அடுத்து ரவி சாஸ்திரி ஒரே ரன்னில் வெளியேறினார்.

மனம் தளராத கபில் அசராமல் நின்று ஆடினார். மைதானத்தின் எல்லா மூலைகளிலும் பந்துகள் பறக்க ஆரம்பித்தன. மதன்லால் (39 பந்துகளில் 17), கிர்மானி (56 பந்து களில் 24) ஆகியோர் துணையுடன் கபில் அணியின் எண்ணிக்கையை 266க்குக் கொண்டுவந்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 138 பந்துகளை எதிர்கொண்டு 175 ரன்களைக் கபில் அடித்தார். 16 ஓவர்களில் கிர்மானியுடன் இணைந்து 126 ரன் எடுத்தார். இதுதான் இன்றுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் 9-வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ஸ்கோர். கபிலின் மிகவும் துல்லியமாகவும் கவனமாகவும் அவர் ரன் குவித்தார். 49-வது ஓவரில் சதம் அடித்த அவர் அடுத்த 11 ஓவர்களில் 75 ரன் அடித்தார். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 235 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

கபிலின் கிரிக்கெட் வாழ்வில் மட்டுமின்றி உலகக் கோப்பை வரலாற்றிலும் ஒரு நாள் பந்தயங்களிலும் மறக்கவே முடியாத ஆட்டமாக அது அமைந்துவிட்டது. அந்த இன்னிங்ஸ் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு உலகக் கோப்பை கிடைத்திருக்காது என்று உறுதியாகச் சொல்லலாம். இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ஜிம்பாப்வேயை எதிர்கொண்ட இந்தியா அந்தப் போட்டியில் தோற்றிருந்தால் அரை இறுதிக்குச் செல்லும் வாய்ப்பு மிகவும் குறைந்திருக்கும்.

அந்த ஆட்டமும் அதன் பிறகு பெற்ற கோப்பையும் இந்தியாவை உலகின் முக்கியமான அணிகளுள் ஒன்றாகத் தலைநிமிரவைத்தன. இன்றளவிலும் அந்த நிலை தொடர்கிறது. அதற்கு அஸ்திவாரம் போட்டது கபிலின் அந்த ஒரு நாள் ஆட்டம் என்று சொன்னால் அதில் மிகை இருக்காது.

அணிகள் கடந்து வந்த பாதைகள்

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணிக்கும் ஆறு ஆட்டங்கள். மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, இந்தியா ஆகியவை ஒரு பிரிவு. இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவை இன்னொரு பிரிவு.

மே.இ. தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலம் பொருந்தியவையாக இருந்தன. ஆனால், ஆஸ்திரேலியா பின்தங்கியது. இந்தியா ஆஸ்திரேலியாவையும் ஜிம்பாப்வேயையும் விடச் சிறப்பாக ஆடி நான்கு வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் மட்டுமே வென்றது.

ஜிம்பாப்வேயுடனான போட்டியில் தோற்றது ஆஸ்திரேலிய அணிக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அது ஜிம்பாப்வேயின் முதல் சர்வதேசப்போட்டி என்பதும் குறிப்பிடத் தக்கது. அதன் பிறகு ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா பல ஆண்டுகளுக்கு ஒரு போட்டியில்கூடத் தோற்கவில்லை. 31 ஆண்டுகள் கழித்து அண்மையில்தான் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வென்றது.

மே.இ. தீவுகளும் இங்கிலாந்தும் தலா ஐந்து போட்டிகளில் வென்று தத்தமது பிரிவில் முன்னணியில் இருந்தன. பாகிஸ்தானும் நியூசிலாந்தும் தலா மூன்று போட்டிகளில் வென்றன. புள்ளிகள் கணக்கில் முன்னைலை பெற்ற பாகிஸ்தான் அரை இறுதிக்கு வந்தது. இரண்டு அரை இறுதிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றதால் இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும் நிலை உருவாகலாம் என்னும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மேற்கிந்தியா பாகிஸ்தானை வென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு போட்டியிலும் மோதிக்கொள்ளாத உலகக் கோப்பை ஆட்டமாக 1983 போட்டித் தொடர் அமைந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x