Published : 08 Jan 2015 04:47 PM
Last Updated : 08 Jan 2015 04:47 PM

ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் சதங்கள்: சச்சின் டெண்டுல்கரை நெருங்கும் கோலி

சிட்னி டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாளான இன்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 140 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார் விராட் கோலி.

சிட்னி டெஸ்ட் 3-ஆம் நாள் ஆட்டத்தின் சுவையான புள்ளி விவரங்கள் இதோ:

இன்றைய சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 5 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் 6 சதங்கள் எடுத்து இந்திய வீரர் என்ற முறையில் ஆஸ்திரேலியாவில் எடுத்த சதங்கள் எண்ணிக்கைப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். சுனில் கவாஸ்கரும் ஆஸ்திரேலிய மண்னில் 5 சதங்களை எடுத்துள்ளார். டேவிட் கோவர், கிளைவ் லாய்ட் ஆகியோரும் 5 சதங்களை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்:

ஜே.பி.ஹாப்ஸ் 1908-29 ஆண்டுகளுக்கு இடையே விளையாடியவர். இவர் 9 சதங்களை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளார். 2-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் வால்டர் ஹேமண்ட் 7 சதங்களுடன் இருக்கிறார். 3-வது இடத்திலும் இங்கிலாந்து வீரர் சட்கிளிப் 6 சதங்களுடன் இருக்கிறார். லாரா, லஷ்மண், விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் ஆகியோர் 4 சதங்களை எடுத்துள்ளனர். சமகாலத்திய வீரர்களில் வேறு எந்த வீர்ர் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

பார்டர்-கவாஸ்லர் டிராபி தொடங்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரராக ராகுல் திராவிட்தான் இருந்து வந்தார். அவர் 2003-04 தொடரில் 619 ரன்கள் எடுத்தார். கோலி தற்போது இந்த இன்னிங்ஸில் ஆட்டமிழக்காத நிலையில் 639 ரன்களை எடுத்து திராவிடை முறியடித்துள்ளார்.

ஒரே டெஸ்ட் தொடரில் 4 சதங்களை அடித்த வகையில் விராட் கோலி, சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்துள்ளார். ஆனால் சுனில் கவாஸ்கர் தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே (1971) ஹெல்மெட் அணியாமல் பயங்கர வேகப்பந்து வீச்சாளர்களை மேற்கிந்திய மண்ணில் சந்தித்து 4 சதங்களை எடுத்தார்.

பிறகு 1978-79 தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மீண்டும் 4 சதங்களை எடுத்து சாதனையை மீண்டும் நிகழ்த்தினார்.

கேப்டனாக முதல் 3 இன்னிங்ஸ்களில் சதம் எடுத்த ஒரே கேப்டன்/வீரர் கோலிதான். அடிலெய்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் பிறகு சிட்னியில் முழுநேர கேப்டனான பிறகு இன்று முதல் இன்னிங்ஸில் சதம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x