

ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கால் இந்திய கிரிக்கெட்டுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று ஐசிசி தலைவர் என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐசிசி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீனிவாசனிடம் ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கு பற்றி கேட்டபோது, “நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நான் கருத்துகள் எதையும் தெரிவிக்கக் கூடாது. ஐபிஎல் வழக்கால் இந்திய கிரிக்கெட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ” என்று கூறினார். தோனியை இந்தியா சிமெண்ட்ஸின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகச் சொல்வீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “நான் எதற்காக இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவேண்டும்?” என்றார்.
தவறான குற்றச்சாட்டுகள்
முத்கல் குழு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தாக்கூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கபில் சிபில் மூலமாக சீனிவாசன் தெரிவித்ததாவது: என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. என் மருமகன் மீது புகார் எழுந்தவுடன் உடனே நடவடிக்கை எடுத்தேன். குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா மீது பிசிசிஐ புகார் அளித்துள்ளது.