

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய கேப்டன் தோனி ஓய்வு பெற்றது ஆச்சரியமான முடிவாக இருக்கிறது என்று முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.
கவாஸ்கர்: இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் கேப்டன் பொறுப்பை உதறலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு வீரராகவே அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு வீரராக 2 அல்லது 3 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் திறமை அவரிடம் உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
ஒரு கேப்டனாக சுமை அதிகம்தான். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முயற்சிகளை மேற்கொண்டு அது பயனளிக்காமல் போயிருக்கலாம். எனவே தோனி இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கலாம். ஒருவீரராக தோனியை இந்தியா இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் சென்னை சேப்பாக்கத்தில் எடுத்த 224 ரன்களை யார் மறக்க முடியும்? ஆனால், ஒரு வீரராக இந்தியா அவரை நீண்ட நாட்களுக்கு இழக்கும் என்றே கருதுகிறேன்.
கோலி மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை காலம்தான் கூற வேண்டும்”
என்று தனியார் தொலைக்காட்சியில் அவர் தெரிவித்தார்.
மெல்போர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் ‘இந்த அணிக்கு இது கற்றுக் கொள்ளும் காலம்’என்று தோனி கூறியுள்ளது பற்றி கவாஸ்கர் கூறுகையில், “ஒண்ணாவதில் பாஸ் செய்ய முடியாமல் நீண்ட நாட்களாக போராடும் மாணவர் கூற்றுபோல் உள்ளது. நீண்ட நாட்களாக கற்றுக் கொண்டேயிருந்தால் எப்படி? முடிவுகள் சாதகமாக வேண்டாமா? குறிப்பாக பவுலர்கள். பவுலர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமாக பொறுமை காத்து விட்டோம்.” என்றார்.
வெங்சர்க்கார்: தோனி ஒரு நல்ல உடல்தகுதி உடைய வீரர். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் ஆடியிருக்கலாம். எனக்கு அவரது முடிவு ஆச்சரியமாக உள்ளது. ஆனால், கோலியிடம் தலைமையைக் கொடுக்க இது நல்ல தருணம் என்று தோனி நினைத்திருக்கலாம். என்றார்